Vilakilla vithigal ‘AVAN’ – 22
22
மாநிலம் முழுக்க தேடல் படலம் தீவிரமடைந்தது. அதிகாரிகள் மொத்த நகரத்தையும் சலித்து எடுத்து கொண்டிருந்தனர்.
சந்தேகத்திற்கு இடமாக மருத்துவமனை விட்டு வெளியே சென்ற அந்த அவசர ஊர்தியை தேடித்தான் அவர்கள் பயணம் தீவிரமெடுத்தது. ஆனால் மாநகர எல்லைக்கு முன்னதாகவே அந்த ஊர்தி பயணித்துச் சென்ற தடம் தொலைந்து போனது. கடத்தல்காரர்கள் வேறு வாகனத்திற்கு மாறி இருக்கக் கூடும்.
அந்த ஊர்தி கடந்து சென்ற நேரத்தை வைத்து கடத்தல்காரர்கள் எங்கிருப்பார்கள் என்று குருட்டாம்போக்கில்தான் காவலர்கள் தங்கள் தேடலை மேற்கொண்டிருந்தனர்.
அந்த நடுநிசி இரவிலும் முதலமைச்சரை மீட்டுவிட வேண்டுமென்று காவலர்கள் தீவிரமாக தங்களின் பணியைச் செய்து கொண்டிருக்க, முகுந்தன் தன் பதவியை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்று யோசித்திருந்தான்.
நந்தினி எதையாவது ஏடாகுடாமாக செய்வதற்கு முன்னதாக வர்மாஜீயிடம் முதலமைச்சர் கடத்தலைப் பற்றித் தெரிவித்து அவசரக் கால முதலமைச்சராக தான் பதவியேற்றிட வேண்டும். அதன் பிறகு யாரும் தன்னை எதுவும் செய்ய முடியாது.
ஆனால் அவன் அரசியல் மூளைக்கும் எட்டாத ஒன்று இப்படியொரு கடத்தலைச் செய்து அதில் நந்தினி என்ன ஆதாயத்தைப் பெற நினைக்கிறாள்
‘அடுத்து அவள் என்ன செய்யப் போகிறாள்’ என்பதுதான்.
இப்படியான யோசனையோடும் பயத்தோடும் முகுந்தன் அந்த இரவை கடத்திக் கொண்டிருந்தான்.
நேரம் குறைந்து கொண்டே வந்தது. மணி நான்கை எட்டியிருந்தது. இன்னும் சில மணி நேரங்களில் விடியல் வந்துவிடும்.
சரியாக அதேநேரத்தில் தன்னந்தனியே நடுக்காட்டில் அமைந்திருந்த அந்த குடிலின் முன்னே வந்து ஜீப்பை நிறுத்தினான் லெனின்.
பின்னிருக்கையில் விஜ்ஜு தூங்கிவிழுந்து கொண்டிருக்க, அவன் காதருகே கேட்ட உறுமலில் பதறி துடித்து, “ஐயோ அம்மா! புலி” அலற, லெனின் சத்தமாகச் சிரித்தான்.
“அட… நீங்கதானா ண்ணா” என்று விஜ்ஜு ஆசுவாசமாக மூச்சை இழுத்துவிட்டுக் கொள்ள,
“நானேதான்… ஆனா இன்னும் கொஞ்ச நேரம் நீ இப்படி தூங்கிட்டு இருந்த… ஒரிஜினல் புலி… கரடி எல்லாம் வந்திரும்” என்று சொல்லி கொண்டே இறங்கியவன் முழுக்க முழுக்க மரத்தாலான அந்த குடிலை திறந்தான்.
“இங்க புலி கரடி எல்லாம் இருக்கா அண்ணா?” என்று கேட்டவனுக்கு இருளால் மூழ்கியிருந்த அந்த அடர்ந்த காட்டை பார்த்து வயிற்றுக்குள் பயபந்து உருண்டது.
“பேசிக்கிட்டே இருக்காதேடா… வண்டில இருந்து பொருளெல்லாம் இறக்கி வை” என்று லெனின் கடுப்பாக, விஜ்ஜு அச்சத்தோடு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அனைத்து பொருட்களையும் இறக்கி வைத்தான்.
அப்போது குடிலிலிருந்து மின்விளக்கு பளிச்சிட்டதில் விஜ்ஜுவின் முகம் பிரகாசமானது. வெளிச்சத்தைப் பார்த்த நொடி அவனுக்குக் கொஞ்சமாக தைரியம் பிறந்தது.
“என்ன அண்ணா… இந்த நடு காட்டுக்குள்ள கரன்ட் எல்லா இருக்கா?” என்றவன் வியப்படைய, “சோலார்ல எரியுதுடா” என்று லெனின் சொல்லும் போதே ஒரளவு அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டிருந்த அந்த குடிலை பார்த்து விஜ்ஜு அதிசயித்தான்.
“எல்லாத்தையும் உள்ளே எடுத்து வந்து வை” என்று சொல்லியபடி லெனின் மடித்திருந்த கட்டிலைப் பிரித்து அதன் மீது மெத்தையை விரித்தான்.
கிட்டத்தட்டப் பன்னிரண்டு மணி நேரம் மேல் தொடர்ச்சியாக வண்டியை இயக்கிக் கொண்டு வந்தவன் துளி கூட சோர்வில்லாமல் வேலை செய்வதை பார்த்து விஜ்ஜுவிற்கு ஆச்சரியம்தான்.
ஜீப்பிலிருந்து சமையல் பொருட்கள் அனைத்தையும் இறக்கி வைத்தவனுக்கு அந்த மரவீட்டைப் பார்த்து வியப்பு நீங்கவில்லை.
“என்னடா பார்த்துட்டே இருக்க… எல்லாத்தையும் உள்ளே கொண்டு வந்து வை”
அவன் சொன்னது போல அனைத்து பொருட்களையும் உள்ளே கொண்டு வந்தவன், “ஆமா… காட்டுக்குள்ள இதெல்லாம் எப்படி அண்ணே? பாரஸ்ட் ஆபிசர்ஸ்னால ஏதும் பிரச்சனை வந்திராதா?” என்று வினவ,
“பணமும் அதிகாரமும் இருந்தா என்ன வேணா செய்யலாம்… இல்லாட்டி பெர்மிஷன் இல்லாம இந்த நட்டு நடு ராத்திரில காட்டுக்குள் வர முடியுமா என்ன?” என்றவன் சொல்ல விஜ்ஜு அவனை கூர்ந்து பார்த்தான்.
“உனக்கு தெரியுமா? இந்த வீட்டை செட் பண்ண ஒரு மாசம் ஆச்சு?”
“அப்போ ஒரு மாசம் முன்னாடியே ப்ளேன் போட்டீங்களா?”
“உஹும்… பத்து வருஷத்துக்கு முன்னாடி” என்று லெனின் சொன்னதை கேட்டு விஜ்ஜுவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
“பத்து வருஷமா?”
“சும்மா பேசிட்டே இருக்காதே டா… வா… அவரை போய் தூக்கிட்டு வருவோம்” என்க, இருவரும் ஜீப்பில் கிடத்தப்பட்டிருந்த அறிவழகனை பத்திரமாகத் தூக்கி வந்து கட்டிலில் படுக்க வைத்தனர்.
“சரி… நீ போய் கொஞ்சம் தண்ணி சுட வைச்சு எடுத்துட்டு வா” என்றபடி லெனின் எடுத்து வந்த மருத்துவ பெட்டியிலிருந்த உபகரணங்களை கொண்டு அவர் உடல்நிலையைச் சோதித்தான்.
பின்னர் ஊசியில் மருந்தேற்றி அவர் உடலில் செலுத்திவிட்டு திரும்ப விஜ்ஜு சுடு தண்ணீரோடு வந்து நின்றான்.
“ஏன் அண்ணா… எனக்கு ஒரு டவுட்?” என்று மெதுவாக ஆரம்பிக்க லெனின் அவனைத் திரும்பி முறைக்கவும் அவன் வாயை மூடி கொண்டான்.
“தண்ணி ரொம்ப சூடா இருக்கு… கொஞ்சம் வெதுவெதுப்பா எடுத்துட்டு வா… அவருக்கு குடிக்க கொடுக்கணும்”
சில நிமிடங்கள் கழித்து விஜ்ஜு தண்ணீரை வெதுவெதுப்பாகக் கொடுக்கவும் லெனின் அவர் தலையுயர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக அதனைக் குடிக்க வைத்தான்.
அறிவழகன் அரைகுறை மயக்கத்திலேயே தண்ணீரை குடிக்க, அவன் மீண்டும் விஜ்ஜுவிடம் திரும்பி, “கொஞ்சம் பெரிய பாத்திரத்துல தண்ணி சுட வைச்சு எடுத்துட்டு வா” என்றதும்,
“திரும்பியுமா?” என்று விஜ்ஜு கேட்க,
“அவருக்கு டைப்பர் மாத்தி விடனும்டா… போ சீக்கிரம் எடுத்துட்டு வா” என்றான்.
“ஐயே! இதெல்லாம் ஒரு பொழைப்பா… இப்படியெல்லாம் ஆயா வேலை செய்யவா நாம இந்த ஆளை கஷ்டப்பட்டுத் தூக்கிட்டு வந்தோம்” என்று விஜ்ஜு சொன்னதில் லெனின் பார்வை நெருப்பை கக்க அதனை பார்த்த நொடி தாமதிக்காமல் அவன் சொன்ன வேலையை செய்து முடித்தான்.
கைகளை அலம்பிக் கொண்டே விஜ்ஜுவை பார்த்த லெனின், “ஆமா ஏதோ டவுட்னு ஆரம்பிச்சியே… என்னடா அது?” என்றான்.
“கேட்டா முறைக்கக் கூடாது”
“மாட்டேன் சொல்லு” என்றவன் புன்னகைக்க,
“நீ டாக்டருக்குதானே படிச்சு இருக்க” விஜ்ஜு தயங்கி தயங்கி கேட்க லெனினிடமிருந்து பதிலில்லை.
“எனக்கு அடிப்பட்ட போது கூட நீ ட்ரீட்மென்ட் பண்ண… அப்புறம் அந்த நந்தினிக்கு கூட… அப்பெல்லாம் கூட எனக்கு இந்த டவுட் வரும் ண்ணா” என்றவன் சொன்னதை கேட்டு,
“கதவை மூடிக்கோ… நான் போய் ஜீப்பை தள்ளி நிறுத்திட்டு வரேன்” என்று அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் லெனின் வெளியேறிவிட்டான்.
‘அதானே… பதில் சொல்லிட்டாலும்… இவரும் அந்த நந்தினியும் ஒரே ரகம்’ என்று புலம்பி கொண்டே கதவை மூடியவனுக்கு,
‘இந்த நட்டு நடு காட்டுல தனியா விட்டுட்டு போறாரே’ என்று கொஞ்சம் அச்சமாகவும் இருந்தது.
“ஒகே ஒகே… அண்ணே வந்துருவாரு… எங்கே போறாரு” என்று தனக்குத்தானே நெஞ்சைத் தட்டி சமாதானம் உரைத்து கொண்டவன்,
“காலையில இருந்து பிஸ்கட் தின்னு தின்னு ஒரு மாதிரி இருக்கு… ஏதாச்சும் சூடா சமைச்சு சாப்பிடுவோம்” என்று தான் எடுத்து வந்த பையிலிருந்து நூடல்ஸை எடுத்து சமைக்க துவங்கினான்.
அப்போது அறிவழகனிடம் அசைவு தெரிவதாக தோன்றவும் பதட்டமாக அவர் அருகே சென்று எட்டி பார்த்தான். உயிரற்ற உடல்போல்தான் படுத்திருந்தார்.
“ம்ம்கும்… ஏற்கனவே பாதி பிணம்… இந்த ஆளை இவ்வளவு ரிஸ்க் எடுத்து தூக்கணுமாக்கும்? எல்லாம் அந்த நந்தினி பிசாசால… நட்டு நடு காட்டுல நாங்க இங்க கஷ்டப்பட்டிருக்கோம்… அவ மட்டும் ஜாலியா காதலனோட கட்டி புரண்டுட்டு இருக்கா?” என்று புலம்பியவனுக்கு நந்தினியின் நிலைமை புரிய வாய்ப்பில்லை.
அவன் மட்டுமில்லை. வேறு யாருமே அவளை அத்தனை சுலபமாகப் புரிந்து கொள்ள முடியாது.
இருளும் தனிமையும் நந்தினிக்கு சிறு வயதிலிருந்தே பழக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் இப்போது பாரதி உடன் இருந்தும் இந்த தனிமை அவளைத் தின்று கொண்டிருந்தது. லெனினிடம் பேசிய பிறகு அவளுடைய கொஞ்ச நஞ்ச உறக்கமும் தொலைந்து போயிருந்தது.
கடலில் தத்தளித்தவளுக்கு உயிரை காக்க ஒரு பற்றுக்கோல் கிடைத்ததுபோல்தான் பாரதி அவளுக்குக் கிடைத்தான். துரதிருஷ்டவசமாக அவனைப் பாதியில் தொலைத்துவிட்டாள்.
ஆனால் மீண்டும் அவன் கிடைத்த போது தன் அன்பையும் காதலையும் மொத்தமாகக் கொடுக்க வேண்டுமென்றுதான் நினைத்தாள். ஆனால் அம்முறையும் அவள் துரதிஷ்டம் முந்திக் கொண்டது. துர்கா பாரதியின் மனதில் இடம்பிடித்துவிட்டாள். தான் இருக்க வேண்டிய இடத்தில் இன்னொருத்தி. அது எப்படிச் சாத்தியமானது.
முகுந்தன் அந்த செய்தி தாளை காட்டிய போது அவளால் நம்பவே முடியவில்லை. பலமுறை அதிலிருந்து படத்தை உற்று பார்த்தாள்.
“இல்ல இல்ல… இது பொய்… நிச்சயமா பொய்தான்… நான் நம்ப மாட்டேன்” என்றவள் அந்த இடமே அதிருமளவுக்கு கத்தி கதறினாள்.
“இது ஒன்னும் பொய் இல்ல… உண்மைதான்… அந்த துர்காவும் பாரதியும் லவ் பண்றாங்க… நீ பைத்தியமாட்டும் அவனையே நினைச்சிட்டு உனக்கு அமையுற நல்ல வாழ்க்கையை கெடுத்துக்காதே” முகுந்தன் அக்கறையாகப் பேசுவது போல சூட்சமமாகத் தான் நினைத்ததைச் சாதித்துக் கொள்ளப் பார்த்தான்.
“ஒ… நீ நினைச்சதை நடத்திக்க இப்படியொரு கதையைக் கட்டிக்கிட்டு இருக்கியா?”
“சத்தியமா இல்ல… இந்த நியூஸ் உண்மைதான்” என்றவன் அழுத்திச் சொல்ல,
“சரி இருக்கட்டும்… ஆனா அதுக்காக நீ சொன்ன அந்த ஆளை நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைச்சியா?” என்றவள் அவனை முறைத்து பார்க்க,
“பண்ணிக்காம… உன் தகுதிக்கு இதுவே ரொம்ப ஜாஸ்திடி… இந்தியாவிலயே பெரிய பிஸன்ஸ் மேன் ராஜீவ்… ரெண்டு தடவை டிவோர்ஸ் ஆனாலும் பார்க்க யங்காத்தான் இருக்காரு… என்னவோ உன்னைப் பார்த்ததும் அவருக்கு ரொம்ப பிடிச்சு போச்சு… கல்யாணம் பண்ணிக்கிறன்னு சொல்றாரு… உனக்கு இது பெரிய சான்ஸ்… இதை விட பெட்டரான வாழ்க்கை கிடைக்காது” என்றவன் பேசிக் கொண்டே போனான்.
அவன் சொல்வதை எல்லாம் மௌனமாக கேட்டிருந்தவள், “சரி நான் சம்மதிக்கிறேன்” என்று சுருக்கமாகக் கூற,
“நிஜமாவா சொல்ற?” என்று முகுந்தன் அவளை நம்பாமல் பார்த்தான்.
“எனக்கு இதை விட பெட்டரான வாழ்க்கை கிடைக்காது” என்றவள் சொன்ன நொடி முகுந்தன் முகம் பிரகாசித்தது. அவள் சொன்னதை அப்படியே நம்பிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்துவிட்டான்.
ஒரு மாதத்திற்கும் மேலாக அந்த ராஜீவ கபூரை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி முகுந்தன் அவளை அறையிலேயே அடைத்து வைத்திருக்கிறான்.
அன்று தெரியாமல் அந்த ராஜீவின் மீது மோதியதற்கு தனக்கு இத்தனை பெரிய தண்டனையா? அவனுக்கு நாற்பது ஐந்து வயதிருக்கலாம். அன்று அவன் பார்த்த பார்வைக்கான அர்த்தம் அவளுக்கு அப்போது புரியவில்லை.
ஒவ்வொரு முறையும் அங்கிருந்து தப்பிக்க முயன்று மாட்டிக் கொண்டுவிட்டாள்.
இனியும் முடியாது. அவள் போராடிப் போராடி களைத்து போய்விட்டாள். அந்த செய்தி தாளைப் பார்த்தவள் சுக்குநூறாக உடைந்துவிட்டாள்.
அவளுடைய அடையாளங்கள் மதிப்பீட்டுத் தாள்கள் அனைத்தையும் எரித்து சம்பலாக்கியது பாரதி மீது கொண்ட அதீத நம்பிக்கையினால்தான். கடைசி வரை அவன் தன்னோடு இருப்பான் என்று நினைத்திருந்தவளுக்கு இது மிக பெரிய ஏமாற்றம். அப்போது அவளுக்கு உண்டான வலிகள் சொல்லிலடங்கா!
பாரதி வேறொரு பெண்ணுடன் அத்தனை நெருக்கமாக நின்றிருந்த காட்சியும் பத்திரிக்கையில் எழுதப்பட்டிருந்த கதைகளும் அவள் நம்பிக்கையைச் சம்பாலாக்கிவிட்டது.
தான் உயிரோடு இருக்கக் கூடாது என்று அந்த தருணத்தில்தான் அவள் முடிவெடுத்தாள். அதனாலேயே திருமணத்திற்கு அவள் சம்மதம் சொன்னாள். முகுந்தன் உடனடியாக ராஜீவிற்குச் அழைத்து தெரியப்படுத்தினான். விமானம் வழியாக மும்பையிலிருந்து அடுத்த நாள் காலையே நந்தினியைப் பார்க்கச் சென்னை வந்துவிட்டான். ஆனால் அதுவே அவனின் கடைசி பயணமாக அமைந்தது.