Virus Attack – 14
வைரஸ் அட்டாக் – 14
“என்னங்கடா டபுள் ஆக்ட் கொடுக்குறீங்க? ஹேய்! யாருடா நீ?” என நிம்மி அங்கே இருந்த விஸ்வாவிடம் எகிறி குதிக்க,
“காயா மாயா சிவஸ்ய சாயா? நான்தான் விஸ்வாமித்ரானந்தா குருஜி. இந்த நாமத்தை எனக்குக் கொடுத்ததே நீங்கதானே?” என மிக மிக எதார்த்தமாக அதையே மறுபடியும் சொன்னவன், மிகப் பணிவாக அவர் முன் கரம் குவித்து நின்றான் அவன், அவரை நன்றாக வெறுப்பேற்றுவதுபோல்.
தலையைப் பிய்த்துக்கொண்டார் நிம்மி.
மறுபடியும் சாட்டிலைட் ஃபோன் மூலம் வீடியோ காலில் நிர்மல்யாவில், அதுதான் அவருக்குச் சொந்தமான அந்த தீவின் பெயர். அங்கே விஸ்வாவுக்கு காவலிருந்த அந்த கும்பலின் தலைவனை அழைத்தவர் ஃபோனை விஸ்வாவிடம் கொடுக்கச்சொன்னார் அவர்.
அவன் அழைப்பில் வந்ததும், “ஹேய்… நீ விஸ்வா இல்லதான? உண்மைய சொல்லு? விஸ்வாவுக்கு டூப் போட்டு என்னை குழப்பி விட அந்த சந்திரமௌலி கிட்ட எவ்வளவு பணம் வாங்கின?” என அவர் சரமாரியாக கேள்விக்கணைகளைத் தொடுக்க,
“என்ன குருஜி! புதுசா எதாவது தியான முறையை கத்துக்கிட்டு ட்ரை பண்ணீங்களா? மூளை குழம்பி கிழம்பி போச்சா என்ன?” என அவன் அதீத கடுப்புடன் கேட்க, அவருக்குப் பின்னால் வந்து நின்று, ‘ஈ’ என பற்களை காட்டி செல்ஃபீ போஸ் கொடுத்தான் அந்த நகல் விஸ்வா.
குறுக்கே வந்தவனை பார்த்ததும் ஒரு நொடி தன் கண்களையே நம்ப முடியவில்லை அசல் விஸ்வாவால்.
விஸ்வாவும் சரி நிம்மியும் சரி ஸ்தம்பித்த நிலையிலிருக்க, அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டவன், அவர் கையிலிருந்த அந்த கைப்பேசியைப் பறித்துக்கொண்டு இங்கேயும் அங்கேயுமாக ஓடினான் அந்த நகல் விஸ்வா.
உலகளாவிய பல ரகசிய தொடர்புகளுக்கு மட்டுமே அவர் பயன்படுத்தும், செயற்கைக்கோள் மூலமாக இயங்கும் அந்த கைப்பேசி வேறு யார் கையில் கிடைத்தாலும் அது பெரிய ஆப்பாகப் போய்விடும் நிம்மிக்கு.
காரணம் முறையான அனுமதியின்றி அதைப் பயன்படுத்துவது இந்தியாவைப் பொறுத்தவரை சட்ட விரோதமாகும். அப்படிப்பட்ட அனுமதி எதையும் அவர் பெறவுமில்லை.
ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்றவர், “அடேய்… எவனாவது இவன் கைல இருக்கற ஃபோனை பிடுங்குங்கடா” என கத்தினார் நிம்மி.
அதில் பதறியடித்துக்கொண்டு அங்கே வந்த அவருடைய சிஷ்யர்கள், சில நிமிட போராட்டத்திற்குப் பிறகு, இங்கே அங்கே எனப் போக்கு காட்டி ஓடிக்கொண்டிருந்த அந்த நகல் விஸ்வாவிடமிருந்து நிம்மியின் பேசியை ஒரு வழியாகப் பறித்து அவரிடம் ஒப்படைத்தனர்.
நிம்மதி பெருமூச்சு விட்டவர், ‘இவனை பார்த்தால் நார்மலா இருக்கற மாதிரியே தெரியலையே! ஆனா… அவ்வளவு தெளிவா பேசறதை வெச்சு பார்த்தால், நம்ம ‘நிர்மல்யா’ல இருக்கறவன்தான் உண்மையான விஸ்வான்னு தோணுது. இன்னொரு விஷயம் என்னன்னா, இவன் ஒரிஜினலா இருந்தால், அந்த சந்திரமௌலி இவனை மறுபடியும் இங்க வர விட்டிருக்க மாட்டான். ஸோ… அங்க இருக்கறவன்தான் ஒரிஜினலா இருக்க முடியும்!’ என தனக்குள்ளேயே குழம்பி ஒருவாறு தெளிந்து ஒரு முடிவுக்கு வந்தவராக,
‘அப்படின்னா இவன் யார்? இவன் இங்க எப்படி வந்தான்? எதுக்காக வந்திருக்கான்?’ என தொடர் கேள்விகள் அவர் மனதில் வரிசைகட்டிக்கொண்டு நிற்க, “இவன பிடிச்சு அடைச்சு வைங்க… அப்பறமா இவனை விசாரிக்க வேண்டிய விதத்துல விசாரிக்கலாம்” என்று நிம்மி சொல்ல, அவர்கள் அவனை அங்கிருந்து இழுத்துச் சென்றனர்.
அதுவரை ஒரு குதூகலத்துடன் அதைப் பார்த்துக்கொண்டிருந்த மேனகாவின் சிரிப்பு அப்படியே மறைந்து போக, ஒரு பதட்டம் சூழ்ந்துகொண்டது அவளை.
அவளுக்குத் தெரியும் இவன் விஸ்வாவுக்கு பதில் பலியிடுவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் ப்ராய்லர் கோழி என்று.
அவளுடைய மனது வேதனையில் அடித்துக்கொண்டது. அடுத்த நொடி கொஞ்சமும் யோசிக்காமல் அந்த தியான மண்டபத்தை நோக்கி ஓடினாள் அவள்.
ஆனால் அவள் அங்கே சென்று சேருவதற்கு முன்பாகவே அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருந்தான் நகல் விஸ்வா.
நிர்மலானந்தாவை பார்க்கும் போதெல்லாம் மனதுக்குள் ஒருவித படபடப்பை உணருவதால், அவருடைய முகத்தை நேருக்கு நேர் காண்பதைத் தவிர்க்கும் பொருட்டு தன் பார்வையைத் திசைதிருப்பி, சுற்றிமுற்றிப் பார்த்தாள் மேனகா தவிப்புடன்.
அதற்கு நேரெதிராக, நிம்மியை நேரில் ஒருமுறை பார்க்கக் கிடைத்த வாய்ப்பாகக் கருதி, அவளை பின் தொடர்ந்து ஓடிவந்த நாயகி – அங்கிருந்தவர்களைப் பொறுத்தவரை பல்பீர் சிங், தலை சாய்ந்து ஒரு நெகிழ்ச்சியுடன் அவரை பார்க்க, தன்னையும் அறியாமல் அவள் கையுடன் எடுத்துவந்திருந்த கூண்டுக்குள்ளிருந்த மில்லி வேறு கீச்சு கீச்சென்று கத்திக்கொண்டே இருக்க, ஏற்கனவே கடுப்பிலிருந்தவர், மேலும் கடுப்பாகி,
“சத்யானந்தா! இவங்க எதுக்கு இப்ப இங்க வந்திருக்காங்க?” என்று நிதானமிழந்தபடி குரலை உயர்த்தினார் நிம்மி.
“தெரியல ஸ்வாமிஜி! என்னனு விசாரிச்சிட்டு உடனே அனுப்பிடுறேன்” என்றவாறு, “சொல்லுங்க அவதார் சிங்! இந்த நேரத்துல இங்க வந்திருக்கீங்க?” என பதட்டத்துடன் கேட்டார் சத்யானந்தா, இந்த வேலைகள் சம்பந்தமாக அவர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்.
“இங்க ஒரு ஒயர் லூசா இருக்கு. அதை டைட் பண்ணிட்டு போகத்தான் வந்தேன். சின்ன வேலைதான்” என்று சொல்லிக்கொண்டே அங்கே தொங்கிக் கொண்டிருந்த ஒரு ஒயரை கையிலெடுத்த மேனகா அதை பிடுங்கி மாற்றிச் சொருகினாள் சன்னமான பயத்துடன். இரண்டு மூன்று நாட்களுக்கு முன் அவள் வாங்கிய ஷாக் அப்படி.
ஆணாக உருமாறியிருந்த வசதியை மெச்சியவண்ணம் வெகு அருகில் நின்று நிம்மியின் முகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தவள், “எந்த ஒயர் லூசா இருக்கு யம்மா… அதான் டிவில படமெல்லாம் நல்லா வருதே” என வெகு நிதானமாக வாயை விட்டுவிட்டு, மேனகா பதறி அருகிலிருந்த இருவரையும் பார்க்க, நாயகி பேசியவிதம் அவர்களுக்கு புரியவில்லை என்பதை உணர்ந்து அவளை முறைக்கவும், நொடிக்குள் சுதாரித்தவள், “பொம்பள யம்மா இல்ல! ஆம்பள… யப்பா… யப்பா… சிங்கு… சிங்கு… ஆம்பள சிங்கு…” என உளறியவள், “அஆங்… அரமணி காட்டியும் டிவில படம் தெர்ல… தெர்ல… மெய்யாலுமே படம் தெர்ல” என்று சமாளிப்பாக அசடு வழிந்தாள்.
நல்லவேளையாக ஷாக் அடிக்காமலிருக்கவே, சூழ்நிலையைச் சபித்தபடி, அவர்கள் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, மறுபடியும் மாற்றி பழையபடியே அந்த ஒயரை சொருகிவிட்டு, “இப்ப சரியாயிடுச்சு” என்று தப்பித்தோம் பிழைத்தோம் என அங்கிருந்து ஓடியே போனாள் மேனகா, வேறு வழி இல்லாமல் நாயகியையும் கையுடன் இழுத்துக்கொண்டு.
****
அவசர அவசரமாகத் தான் தங்கியிருந்த குடிலுக்குள் நுழைந்த மேனகா, வேகமாகக் கதவைத் தாளிட எத்தனிக்க, அதைத் தடுத்து கதவைத் தள்ளி அவளை முந்திக்கொண்டு உள்ளே நுழைந்தாள் நாயகி.
அவளைப் பார்த்து நன்றாக முறைத்தவள், கதவைப் பூட்டிவிட்டு, “முக்கியமா ஒரு கால் பேசப்போறேன். நடுவுல ஏதாவது நை நைன்னு வாயை திறந்தன்னு வைச்சிக்கோ… அப்படியே கிழ்ச்சிடுவேன் ஜாக்கிரதை” என வார்த்தைகளைக் கடித்து துப்ப, அதற்கு அப்பாவி போல விழித்தவள், தன் இரு கைகளாலும் வாயைப் பொத்திக்கொண்டு, ‘பேசவே மாட்டேன்’ என்பதுபோல் தலையசைத்தாள் தொல்லைநாயகி.
உடனே தன் கைப்பேசியை இயக்கி சகுந்தலாவை அழைக்க, தொடர்ந்து இரண்டு மூன்று முறை அழைத்த பிறகே அந்த அழைப்பு ஏற்கப்பட்டது.
“என்ன மெனு! அதுக்குள்ள இத்தனை கால் பண்ணிட்ட. எதாவது பிரச்சனையா?” என சகுந்தலா கேட்க, “சக்கும்மா! பாவம் சக்கும்மா! நம்ம விஸ்வாவோட காப்பி. அவன் அந்த நிர்மலானந்தா கிட்ட ஏடாகூடமா மாட்டிகிட்டான்” எனப் பதட்டத்துடன் அவள் பதில் சொல்ல, “உஃப்… அதுக்கு ஏன் மெனு இவ்வளவு பதட்டபடற” எனக் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் கேட்டவர், “நம்ம மௌலி சாரோட சன்… அதான் அந்த நிஜ விஸ்வா, அவனே அவர் கட்டுப்பாட்டுலதான இருக்கான்” என்றார் சக்கு.
“சக்குமா! அந்த ஒரிஜினலை நான் எவ்வளவு ரிஸ்க் எடுத்து இந்த ஆஸ்ரமத்துல இருந்து வெளியில கொன்டுவந்தேன் தெரியுமா? அவன் கொழுப்பெடுத்து போய் அவர்கிட்ட மாட்டியிருக்கான். ஆனா நம்ம காப்பி அப்படி இல்லல்ல. பாவம் சக்குமா! அவன் அப்பாவி” என மேனகா அவனுக்குப் பரிந்து பேச,
“ஸ்டாப் திஸ் நான்சன்ஸ் மெனு! என்ன இருந்தாலும் இவன் ஒரு ஆர்டிபிசியல் ம்யூட்டண்ட். விஸ்வாவை காப்பாத்தறதுக்காகவே பல கோடி செலவு செஞ்சு உருவாக்கப்பட்டவன். முப்பது வயசு வளர்ந்த ஒருத்தனை ஆறே மாசத்துல காபி பண்ணியிருக்கேன்! இவன மாதிரி இன்னும் நூறு காப்பிய கூட என்னால உருவாக்க முடியும். நாட் ஒரிஜினல். ஸோ இப்ப அசலை பத்தி மட்டும்தான் கவலை படணும்” என அவர் தன்னியல்பாகச் சொல்ல, இப்படி ஈவு இரக்கமே இல்லாமல் பேசுபவர் மீது கோபம்தான் வந்தது மேனகாவுக்கு. அவள் அமைதி காக்கவும், அவளை உணர்ந்தார் போன்று,
“எப்படி மாட்டினான்! பக்கவா ட்ரைன் பண்ணிதான அனுப்பினோம்” எனப் பேச்சை மாற்றினார் அவர்.
உடனே சற்றுமுன் நடந்ததை மேனகா விவரிக்க, “ஓஹ்” என்றவர்,
“அவனோட பிரைன் செல்ஸ் சில சமயம் ஸ்டேபிளா இருக்காது. ஒரு சின்ன இன்ஜெக்ஷன் போட்டா சரியாகியிருக்கும்” என சர்வ சாதாரணமாகச் சொன்னவர்,
“இனஃப் மெனு! இந்த ஹியூமன் குளோனிங் சமாச்சாரமெல்லாம் உலக அளவுல இல்லீகல். ஸோ… போன்ல இவ்வளவு பேசினதே அதிகம்” என்றவர், “ஆமாம்… நிஜ விஸ்வா பத்தி ஹின்ட் கிடைச்சிடுச்சு இல்ல. இப்போதைக்கு அது போதும். உன்னைப் பத்தி மட்டும் நினைச்சிட்டு, மூட்டை முடிச்சை கட்டிட்டு, நீ உடனே அங்க இருந்து கிளம்பற வழியை பாரு” என்று சொல்லிவிட்டு பட்டென அந்த அழைப்பைத் துண்டித்தார் சகுந்தலா.
செய்வதறியாமல் மேனகா திகைத்து நிற்க, அந்த நொடி நிர்மல்யா தீவில் அதிரடியாக நுழைந்தது, ஜப்பானிலிருந்து இயங்கிவரும் நிழல் உலக கூலிப்படையின் நூறு பேர் அடங்கிய கும்பல் ஒன்று.
அடுத்த சில நிமிடங்களில் அங்கே ஒரு சிறிய யுத்தமே நடந்து முடிந்திருக்க, பத்திரமாக மீட்கப்பட்டு தனி விமானம் மூலம் சந்திரமௌலியிடம் ஒப்படைக்கப்பட்டான் விஸ்வா, உடலில் சிறிய கீறல் கூட ஏற்படாமல்.
ஒரு துளியளவு கூட மறுப்பே காண்பிக்காமல் அவன் அங்கே திரும்ப வந்ததே, அவனுடைய ஒவ்வொரு அணுவுக்குள்ளும் புகுந்துகொண்டு அவனை ஆட்டிப்படைக்கும், பெயர்கூட அறியாத ஒரு பெண்ணை கண்டுபிடிப்பதற்காகத்தான்- அந்த பெண் மேனகாதான் என்பதைச் சிறிதும் உணராது வியந்துபோய் வைத்த கண் வாங்காமல் வாஞ்சையுடன் மகனைப் பார்த்திருந்தார் சந்திரமௌலி
*
இரண்டு தினங்கள் கடந்துவிட்டிருந்தது.
கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் வேலைகள் முழுவதுமாக முடிந்து, வந்த ஆட்கள் அனைவரும் கிளம்பிவிட்டிருந்தனர்.
இனி சகுந்தலாவிடம் பேசி பயனில்லை என்பதை உணர்ந்தவள் சந்திரமௌலியைத் தொடர்புகொள்ள முயல, மகன் தன் கைகளுக்குள் வந்துவிட்ட திமிரில், அவளை முற்றிலுமாக தவிர்த்தவர், அவளை உடனே அங்கிருந்து திரும்ப வந்துவிடும்படி நேஹா மூலமாகத் தகவல் அனுப்பியிருந்தார்.
எனக்கென்ன வந்தது என்று போக மனம் இடங்கொடுக்கவில்லை. சென்றால் அவனை கண்டுபிடித்து தன்னுடன் அழைத்துச்சென்றே ஆகவேண்டும் என்ற உறுதி ஏற்பட்டுவிட்டது அவளுக்கு.
அங்கே வந்தது முதல் கேமரா பொருத்துவதை சாக்காக வைத்து அவள் சுற்றி திரிந்ததில் அந்த ஆசிரமத்தின் ஒவ்வொரு மூலையும் அத்துப்படி மேனகாவுக்கு.
கேமராவின் கண்கள் எட்டும் இடம் முழுவதும் துழாவிவிட்டாள் அவள், அந்த நகல் விஸ்வா கிடைத்தபாடில்லை. அங்கே கேமரா பொருத்தப்படாத சில இடங்களும் இருக்கத்தான் செய்தது.
அங்கேயும்கூட அவனை அடைத்துவைத்திருப்பதற்கான அடையாளமே இல்லை.
அங்கிருந்து அவள் கட்டாயம் கிளம்பியே ஆக வேண்டிய நேரமும் நெருங்கிவிட்டது.
உண்மையிலேயே… கண்ணைக் கட்டி காட்டில் விட்ட நிலைதான்.
ஒரு நிலைமைக்கு மேல் நம்பிக்கையற்றுப்போய், இனி அவனைக் கண்டுபிடிக்க வாய்ப்பே இல்லையோ என தொய்ந்து உட்கார்ந்தேவிட்டாள் மேனகா.
“யே… இன்னாமே… இப்ப கப்பல் கவுந்துபோச்சாங்காட்டியும்? இப்பூடி கம்முன்னு குந்திகினா அல்லான் சரியா பூடுமா?
இங்கதா எங்கயான இருப்பான் அந்த டுபுலிகேட்டு. நீ ஒன்னும் மெர்சலாகாத” என தன் பாணியில் அவளுக்கு ஆறுதல் சொல்ல முயன்றாள் நாயகி.
“ப்ச்… உனக்கு புரியாது நாயகி. மொதல்ல, உணர்ச்சிகளை கட்டுப்படுத்தமுடியாம அவசரத்துல பெத்துப்போட்டுட்டு திரும்பி கூட பார்க்காம என்னை தூக்கி எறிஞ்சிட்டு போனாங்களே அந்த பாவிங்கள… கொஞ்சநாளைக்கு முன்னால இந்த சந்ரமௌலி சார… அப்பறம் அவரோட உத்தம புத்திரன்… அதான் அந்த விஸ்வா இருக்கானே அவன… இப்ப அவனோட காப்பிய… இப்படி யாரையாவது தேடி அலையறதே என் பிழைப்பா போச்சு. நான் ஆசைப்பட்ட அந்த ஆராய்ச்சியை மட்டும் இன்னும் தொடங்கக்கூட முடியல” என வேதனையுடன் சொன்னவள்,
“ஒரு உயிரை சுலபமா படைக்க கூட செய்யலாம். அதை காப்பாத்தற கடமையை கூட கை கழுவிட்டு போகலாம், ஆனா அதை பலி கொடுக்கற உரிமை நம்ம யாருக்கும் இல்ல. பாவம் அந்த காப்பி விஸ்வா. அவனை எவ்வளவு ஈஸியா விட்டுட்டு வர சொல்ராங்க பாரு” என மேனகா வேதனையுடன் சொல்ல,
“அதுக்கு நீ இன்னாத்துக்கும்மே பீலிங்கு உட்டுகினு கெடக்கற. அந்த பாவி சந்ராமூளிதான் புட்டுகுனுபூடபோறான் பாரு. என் கரிநாக்கு பலிக்கலன்னா என்ன என்னானு கேளு அஆங்” என நீட்டி முழக்கி நாயகி தன் ஆத்திரத்தைக் கொட்ட, அதே நேரம் வெளியில் ஏதோ சலசலப்பு கேட்கவும், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தாள் மேனகா.
அந்த ஆசிரம சூழ்நிலைக்குக் கொஞ்சமும் பொருந்தாமல், அடியாள் தோற்றத்திலிருந்த இருவர் அந்த இடத்தை கடந்து செல்ல, வேகமாக வெளியில் வந்தவள், ஒளிந்து மறைந்து அவர்களைப் பின்தொடர்ந்தாள்.
கிட்டத்தட்ட ஒருமணி நேரம் நடந்து அவர்கள் இன்னும் கொஞ்சம் அந்த காட்டின் அடர்ந்த பகுதிக்குள்ளே போய், அங்கே இருந்த ஒரு மர வீட்டிற்குள் சென்றனர்.
அங்கே அப்படி ஒரு ஏற்பாட்டை அவ்வளவு வியப்பாக இருந்தது மேனகாவுக்கு.
உடனே அங்கே சென்றால் ஆபத்தில் முடியலாம் என பயந்தவாறு ஒரு பெரிய மரத்தின் பின்னால் அவள் ஒளிந்து நிற்க, சில நிமிடம் கடந்தபிறகு, வெளியில் வந்த அந்த இருவரும், அவர்கள் வந்த வழியிலேயே திரும்பச் சென்று மறைந்தனர்.
உடனே கொஞ்சம் துணிவை வரவழைத்துக்கொண்டு அந்த மர வீட்டிற்குள் சென்றாள் மேனகா.
அங்கே இருந்த ஒரு தூணில் நின்ற நிலையிலேயே கட்டி வைக்கப்பட்டிருந்தான் அந்த நகல் விஸ்வா.
வேறு யாரும் இருப்பதற்கான அடையாளமே இல்லை அங்கே. அந்த பயங்கர சூழ்நிலையில் அங்கே யார் வரப்போகிறார்கள் என்ற அலட்சியம் போலும் என நினைத்தாள் அவள்.
உடுத்தியிருந்த உடைகள் கந்தலாகிப்போய், அங்கங்கே காயங்களுடன், உதடு வேறு கிழித்து ரத்தம் கசிந்துகொண்டிருக்க அரைகுறை மயக்கநிலையிலிருந்தவனின் விழிகள் அந்த புதியவனைப் பார்க்கவும் வியப்புடன் விரிந்தது. கூடவே பயமும் எட்டிப்பார்த்தது அவனுடைய விழிகளில்.
கொடிய விலங்கு எதாவது உள்ளே நுழைந்து அவனைக் கடித்துக் குதறினாலும் கேட்பாரே இல்லை அங்கே. பாவமாக இருந்தது அவளுக்கு.
மேலும் அதை பார்க்கச் சகிக்காமல், வேகமாகப் போய் அவனது கட்டுகளை மேனகா அவிழ்க்க, துவண்டுபோய் அவள் மீதே அவன் சரியவும் பெயருக்கு அவள் முகத்தில் ஒட்டிக்கொண்டிருந்த தாடி மொத்தமாக வழுக்கி கீழே விழுந்தது. அவனுடைய கை பட்டு தலையில் அணிந்திருந்த டர்பன் கூட கழன்று விழ, அதில் அவளுடைய கூந்தல் கட்டவிழ்த்து தோகை விரித்தது.
அவள் ஒரு பெண் என்பதை அறிந்ததும் அவன் திகைத்துப்போய் அவளை பார்த்த விழி பார்த்தபடி பார்த்துக்கொண்டிருக்க, அதையெல்லாம் லட்சியம் செய்யாமல், அவனை மெதுவாகப் பிடித்து கீழே உட்காரவைத்தவள், கலங்கிய கண்களுடன் அவன் உதட்டில் வழிந்த ரத்தத்தைத் தன் விரல் கொண்டு துடைக்கவும், அவள் கையை அப்படியே பற்றி அதில் இதழ் பதித்தவன், “நீதான சக்கும்மா சொன்ன மேனகா?” என்று ஒரு வியப்பு கலந்த மகிழ்ச்சியுடன் கேட்டு அவளை அதிரவைத்துவிட்டு, அவள் பதில் சொல்லும் முன்பே, “தேங்க்ஸ்” என்றான் அந்த நகல் விஸ்வா மென் புன்னகையுடன்.
Lovely update
Aga ipadi kothu vitutangala
Nagalum maunga poda enna agapodi