Vithai-2
விதை 2
அவர்கள் அங்கு செல்வதற்குள் நாம் ஆதித்யா கவுன்செலிங் சென்டர் பற்றிக் காண்போம் வாருங்கள்.
மிகப் பெரிய வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளது ACC( ஆதித்யா கவுன்செலிங் சென்டர்) சென்னையில் இப்படி ஒரு இடம் உண்டா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு, ஒரு அழகான காட்டிற்குள் இருப்பது போன்றதொரு தோற்றம்.
இதற்கு மிக அருகில் பாதுகாக்கப்பட வனப்பகுதியும் அங்கே ஏராளமான பறவைகளும் உள்ளன.
ஏராளமான அரியவகை மரம் செடி கொடிகள், ரோஜாத் தோட்டம், ஸ்விம்மிங் பூல், குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விளையாட ஏதுவான விளையாட்டு திடல், பூங்கா இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இங்கே நுழையும் போதே வரும் இயற்கையின் நறுமணமும், ரம்மியமான சூழலும் எத்தகைய மோசமான மன நிலையில் இருப்போருக்கும் ஒரு நிம்மதியையும் அமைதியையும் வழங்கி, இன்னும் இந்த உலகில் இன்பம் மிச்சமிருக்கிறது என்று உணரவைக்கும்.
நல்ல மனநிலையில் இருந்தால், உலகின் மொத்த இன்பமும் இங்கே குடிகொண்டுள்ளது போல் தோன்றும். அவ்வாறாக பார்த்து பார்த்து மிகுந்த ரசனையுடன் கட்டமைக்கப்பட்டிருந்தது இந்த ACC.
அந்த அழகிய வளாகத்திற்குள் அமரின் கார் நுழைந்த பொழுது அங்கே பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக செய்யப்பட்டிருந்தது.
இவர்களைப் பார்த்த உடன் அங்கிருந்த அனைவரும் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.
அதிதியை அனைவரும் கொண்டாடுவதைப் பார்த்து அமரும், அமரை அனைவரும் கொண்டாடுவதைப் பார்த்து அதிதியும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். இவங்க யாரா இருக்கும் என்று இருவருமே குழம்பினர்.
ரிசெப்ஸனிஷ்ட்டான லீலாவிடம் சென்று அமர் கேட்டான், “யார் லீலாமா அவங்க?”
” இவங்கதான் சார் ஆதி மேடம், நீங்க இவங்கள இப்போதான் நேர்ல பார்க்கிறீங்களா ? “
அவனுள் பட்டாம்பூச்சிக்களும் பரவசமும் குத்தாட்டம் போட்டு குதூகலம் கூட்டின.
“அந்த ஆதி மேடம் இவங்கதானா? அதிதினு பேர் சொன்னாங்களே.”
“அவங்க பேர் அதிதி சார். அவங்களுக்கு ஆதினு கூப்பிட்டா பிடிக்கும் போல. அவங்களுக்கு க்ளோசா இருக்கற எல்லாருமே ஆதின்னுதான் கூப்பிடுவாங்க. அதான் உங்க கிட்ட சொல்லும்போதெல்லாம் ஆதி மேடம்னு சொல்வோம்.”
“ஓஹ் அப்டியா ” என்று கூறிவிட்டு ஒரு ஓரமாய் சென்றவன், ‘எகிறி குதித்தேன் வானம் இடித்தது’ என்ற ரீதியில் அவன் பரவசத்திற்குப் பட்டா பட்டுவாடா செய்தான்.
அவன் சென்றதும் அங்கு வந்த அதிதி,லீலாவிடம் ,அவன் கேட்ட அதே கேள்வியைக் கேட்டாள்.லீலா சிரித்துக்கொண்டே நீங்களும் அவர பார்த்ததில்லல , அவர்தான் மேடம் இந்த ACC ஓனர் .
“வாட்ட்ட்? அமர் சார் இவர்தானா?”
“ஆமா மேடம் “
அப்பொழுதுதான் அதிதிக்கு அவன் பேர் கூட கேட்காமல் அவனை எந்த அளவிற்கு நம்பியுள்ளோம் என்று உரைத்தது. ஆனாலும் அவளுக்கு மகிழ்ச்சி பன் மடங்கு கூடியது. அமர் மீது மரியாதையும், இனம் புரியாத ஈர்ப்பும் கூடியது .
அவர்கள் மகிழ்ந்திருக்கட்டும். நாம் அவர்களைப் பற்றி சற்று காண்போம் வாருங்கள்.
வந்தனாவின் கணினி மூளை கணித்தது போல், அமர்தான் நம் கதையின் நாயகன்.ஆதித்யா பிரைவேட் லிமிடெட் என்ற மருந்து பொருட்கள் உற்பத்தி செய்யும் ஒரு தனியார் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறான்.
அமரிற்கு சிறு வயது முதலே தற்கொலை என்ற வார்த்தையைக் கேட்டாலே மனம் மருகும். இனம் புரியாத தாங்கொணா துயரம் உணர்வையும், உயிரையும் உலுக்கும்.
அன்பும் நம்பிக்கையும் முற்றிலும் தோல்வியுரும் இடங்களிலேயே தற்கொலைகள் வெற்றி பெறுகின்றன என்ற ஆழ்ந்த நம்பிக்கை அமருள்.
எனவே அந்த அன்பையும் நம்பிக்கையையும் உருகி ஒழுகும் மனங்களுக்கு சிறிது அளித்தாலும் ஏராளமான தற்கொலைகளை தாராளமாக தவிர்த்து அழித்துவிடலாம் என்று உறுதியாக நம்பினான்.
அதற்கான ஏற்பாடுதான் இந்த ACC. இருதய அறுவை சிகிச்சை நிபுணரான அவன் தந்தை சபீரும் இதற்கு உறுதுணையாக இருந்தார்.
உணர்வும் ஆக்கமும் அமர்தான் எனினும், மருத்துவ ரீதியாக அவனுக்கு தேவையான அனைத்து உதவிகளும் ஆலோசனைகளும் நல்கியது அவன் தந்தையே. அவருக்கு இதில் மிகுந்த பெருமிதமும் ஆத்ம திருப்தியும்.
அவருக்கும் நிறைய வகையில் உதவியது நம் நாயகி அதிதி. அதிதியின் அன்னை ஒரு கைனோகொலோஜிஸ்ட் . அதிதியின் அன்னையும் அமரின் தந்தையும் ஒரே துறையில் இருப்பதால் நன்கு பழகியவர்கள்.
அதிதியும் அமரின் எண்ணத்தை அப்படியே கொண்டிருந்தாள். எனவே இத்தகைய ஒரு விஷயத்தைக் கேள்வியுற்றதுமே அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.எனவே அவள் அவளாலான அனைத்து உதவிகளையும் செய்து, அந்த ACC யை நிர்வகிக்கும் பொறுப்பினை ஏற்று அங்கேயே சைக்கார்டிஸ்ட்டாகவும் பணிபுரிகிறாள்.
அமரின் தந்தை மூலமாகவும், ACC யில் பணிபுரிவோர் மற்றும் அங்கு ஆலோசனை பெற்று தெளிவுற்ற நபர்கள் மூலமாகவும் ஆதிதி அமர் பற்றியும் , அமர் ஆதி என்ற பெயரில் அதிதி பற்றியும் நிறைய கேள்வியுற்றனர். அப்போதே ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மதிப்பு பெற்றுவிட்டனர். ஆனால் நேரில் பார்த்ததில்லை.
தற்கொலைக்கு முயன்று தோற்ற அக்ஷயா என்ற பெண், இங்குதான் அதிதியிடம் கவுன்செலிங் பெற்றாள். தற்பொழுது அவள் மிகுந்த நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொண்டு நல்ல நிலையில் உள்ளாள்.
அதற்கு நன்றி நவிலும் விதமாக தனது பிறந்தநாளினை இங்கு வந்து கொண்டாடுகிறாள். அவளை பொறுத்தவரை இந்த ACC ஒரு கருவறை, அதிதிதான் அவள் தாய். தற்பொழுது அவள் வாழும் வாழ்க்கை மறுபிறவி. இங்கு அவள் மீண்டும் ஜனித்ததாக நம்புகிறாள்.
அதற்காகத்தான் இங்கு இன்று அனைவரும் கூடியுள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அங்கேயே இரவு உணவும் அங்கிருந்த பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . பஃப்பே சிஸ்டெம்
அதிதியும் அமரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தனர். நிதானமாக பேசிக்கொள்ள ஒரு சரியான சந்தர்ப்பத்திற்காக பார்த்திருந்தனர்.
தன் உடையில் சாஸ் பட்டுவிட்டதென அதனைக் கழுவ வாஷ் ரூம் சென்றாள் வந்தனா.இந்த வாய்ப்பினை மிகச் சரியாக பயன்படுத்திக்கொள்ள எண்ணி,தனியே அமர்ந்திருந்த அதிதி அருகில் சென்று அமர்ந்தான் அமர் ( வர்ஷனை கழட்டி விட்றதெல்லாம் ஒரு மேட்டரா, அப்பணியையும் செவ்வனே செய்தான்).
“ஹலோ சார் “என்று அதிதியே ஆரம்பித்தாள்.
“சாரி சார். என் ப்ரண்ட் பேசினதில்லாம் தப்பா எடுத்துக்காதீங்க” அதிதி
“நீங்கதாங்க தப்பா பேசறீங்க ” அமர்.
அதிர்ச்சியாகப் பார்த்தாள்.
“ப்ளீஸ் கால் மீ அமர். சார் மோர்னு சொன்னீங்களோ, உங்க பதவியை பறிச்சிருவேன். பார்த்து பதனமா பேசுங்க”
இருவரும் ஒருசேர சிரித்தனர்.
“நீங்கதான் ஆதியா? என்னால நம்பவே முடில. நம்ம இவ்ளோ க்ளோஸ் சர்க்கிள்ல இருக்கோம். ஆனா பாருங்க இப்போதான் மீட் பண்றோம். இத வெளில சொன்னா யாராச்சும் நம்புவாங்களா.சினிமாலதான் இதெல்லாம் நடக்கும்”
“ஆமாங்க. எனக்கும் சேம் பீலிங்த்தான். உங்களை பத்தி நிறைய நிறைய கேள்விபட்ருக்கேன். இந்த ஐடியா ஓனர பார்க்கணும்னு பலநாளா முயற்சி செஞ்சேன். அப்போல்லாம் முடில. பாருங்க இன்னைக்கு தானா நடந்திருச்சு.”
“ஆமாங்க நானும் நிறைய கேள்விபட்டருக்கேன் உங்களை பத்தி. உங்களை பார்க்க நானும் ட்ரை பண்ணேன் முடில”
“நீங்க யூஎஸ் போயிருக்கறதா சொன்னாங்க. எப்போ வந்தீங்க”
“நேத்துதாங்க வந்தேன் “
“ஏதோ ப்ராஜெக்ட் விஷயமா அடிக்கடி போறதா சொன்னாங்க”
“ஆமாங்க,அதுவும் என் ட்ரீம் ப்ராஜெக்ட்,இதுவும் என் ட்ரீம்.இதை ஸ்டார்ட் செஞ்சவுடன் அங்க போறதா ஆயிடுச்சு.நான் ரொம்ப குழம்பி போய்ட்டேன். அப்பாதான் நான் எல்லாம் பார்த்துக்கறேன். நீ போய்ட்டுவானு சொன்னாங்க. ஆனா ஓபெனிங் செரிமனிக்கு கூட வர முடியாம போனது ரொம்ப வருத்தம்தான்.
அப்பாதான் உங்களை பத்தி நிறைய சொன்னாரு. நீ கூட இப்டி பார்த்துப்பியா தெரில. உன்னைவிட பன்மடங்கு இதுக்கு பொருத்தமான பொண்ணுதான் இதை பார்த்துக்குறா. நீ கவலைப்படாதான்னு சொல்வார்.ஆறுதல் சொல்றேன்னு பொறாமைபட வச்சுட்டார்னா பாருங்களேன் “
இருவரும் சிரித்தனர்.
“அச்சோ! அங்கிள் என் மேல இவ்ளோ நம்பிக்கை வச்சிருக்காங்களா? நான் அவ்ளோ வொர்த் இல்லையே?”
” இந்த உலகமகா தன்னடக்கத்தை பத்தியும் சொன்னார்”
“ஹாஆஆண்”
“பார்த்துங்க அந்த நிலாவே வாய்க்குள்ள போயிரும்போல.”
இருவரும் வெடித்து சிரித்தனர்.
“நான் இங்க வரும்போதெல்லாம் உங்களை பார்க்க ட்ரை பண்ணேன்ங்க .அப்போ நீங்க இங்க இருக்கமாட்டீங்க.”
“சரி விடுங்க. நம்ம ஓவரா ஆச்சர்யப்பட்டு பொங்கிட்டே இருந்தா,ரீடர்ஸ்க்கு கொட்டாவி பொங்கி தூங்கிற போறாங்க”
“பார்ரா! நீங்க இப்டி கூட பேசுவீங்களா ? ஒரே நாள்ல எவ்ளோ அதிர்ச்சி. தாங்க முடிலங்க.”
“எப்போவாச்சும் வரும். வந்தனா குடுத்த ட்ரெயினிங்”
“இன்னும் நிறைய ட்ரெயினிங் எடுத்துக்கோங்க. சூப்பர் கேரக்டெர்ங்க உங்க ப்ரண்டு. இருக்கற இடம் ஒன்னு கலகலன்னு இருக்கும் ,இல்ல லகலகனு இருக்கும் போல “
“வாவ்வ்வ்! பெர்பெக்டா சொல்லிட்டீங்க. உங்க ப்ரண்டு கூட அதே டைப்தான் போல.”
“ஆமாங்க! அதேஏஏஏ டைப்தான் “
இவங்க இன்னும் பேசி நல்ல்ல்ல்ல்லா டெவெலப் ஆகட்டும். நாம போய் வந்தனாவை கவனிப்போம் வாங்க. பொண்ணு என்ன செஞ்சு வச்சிருக்கோ தெரில.
மொபைலை குடைந்துகொண்டே வந்த வந்தனா, உணவை எடுத்துக்கொண்டு அம்போ என நடந்து வந்து கொண்டிருந்த வர்ஷன் மீது ஆப்டாக மோதினாள். அவன் உடையில் மாடர்ன் ஆர்ட் வரையப்பட்டது,அவன் தட்டிலிருந்த வஸ்துக்களால்.
அனிச்சையாக சாரி சொன்னவள், இவனைப் பார்த்த உடன் வெடித்து சிரித்தாள்.( வந்தனாமா இது தப்பும்மா ). அவனுக்கு கோபம் எகிறி எவெரெஸ்ட் உயரம் அடைந்தது.
“அறிவுதான் அடமானத்துல இருக்குதுனு பார்த்தா கண்ணுமா ? உடம்புல எல்லா பார்ட்ஸ்க்கும் சேர்த்து வாய் ஓவர்டைம் வேலை பார்க்குது. வாய் மட்டும் வேலை செய்ற வித்யாசமான ஜந்துவை இப்போதான் பார்க்குறேன். “
சீற்றத்துடன் காட்டமாக கத்தினான்.(கட்டம் சரி இல்ல பாஸ் உங்களுக்கு)
” ஹலோ மைண்ட் யுவர் வோர்ட்ஸ். நானும் பார்த்துட்டே இருக்கேன். ரொம்பதான் ஓவெரா பேசறீங்க.”
” ஹல்லல்லோ! கண்னு மண்ணு தெரியாம வந்து இடிச்சு,கண்ணா பின்னான்னு என் ட்ரெஸ்ஸ நாசம் பண்ணிட்டு, கெக்க பெக்கனு சிரிச்சிட்டு,இப்போ காச் மூச்னு வேற கத்துறீங்க. ஓவரா பேசறது செய்றதெல்லாம் நீங்க, நான் இல்ல. நான் பேசினது நீங்க செஞ்ச வினைக்கு எதிர்வினை. ந்யூட்டன்ஸ் தேர்ட் லா.”
“ஹல்லல்லல்லோ! ஏதோ தெரியாம இடிச்சிட்டேன்.அதுக்கு சாரி கூட சொல்லிட்டேன். உங்க ட்ரெஸ்ல இருந்த வானவில் வர்ணஜாலங்களை பார்த்து எதார்த்தமா சிரிச்சிட்டேன். அதுக்குன்னு ஜந்துனெல்லாம் சொல்லி பந்து மாதிரி எகிறி எகிறி குதிக்குறீங்க”
“பின்ன எகிறாம, இன்னும் கொஞ்சம் சாஸ் ஊத்துமானு சாந்தமா சொல்வாங்களாக்கும் “
அவன் கூறிய விதத்தில் அவளுக்கு சிரிப்பு வந்தது.
அவன் மேலும் எரிச்சலாகி ஏதோ கூற எத்தனிக்க,
“ஹேய்! சண்டைக்காரா!” என்று சத்தமிட்டது வந்தனாவின் அலைபேசி .(பாவம் அதுக்கே பொறுக்கல போல)
“ரிங்டோன பாரு, இவளுக்குதான் இந்த ரிங்டோன் வைக்கணும், சண்டைகாரினு . அதுகூட தேவை இல்ல. சண்டைகாரானே இருக்கலாம். தப்பில்ல. பொண்ணா இவ.அடங்காத காளை” என்று மைண்ட் வாய்ஸ் போட்டான்.
அப்பப்பா. அவளுக்கு கால் வராம இருந்திருந்தா நம்ம காதுல ரத்தம் வர வச்சிருப்பாங்க.
இப்போது வர்ஷன் வாஷ் ரூம் செல்ல,வந்தனா அதிதியிடம் சென்றாள். அங்கு அமரை பார்த்தவள் புன்னகைத்துவிட்டு,
“ஹலோ சார்! இந்நேரம் அதிதி நான் பேசினத்துக்கு உங்ககிட்ட சாரி சொல்லிருப்பாளே. பட் நான் எந்த சாரி பூரியும் கேட்கமாட்டேன். நான் எந்த தப்பும் செய்லயே. முன்ன பின்ன தெரியாம எப்படி திடீர்னு நம்புறது”
“எக்ஸ்சாக்ட்லி! நீங்க எந்த சாரியும் கேட்க தேவையில்லை. பட் பூரி கேட்கலாம்.”
அனைவருமே சிரித்தனர்.
“பை தி வே, உங்க வண்டி நாளைக்குதான்ரெடி ஆகுமாம். நீங்க புறப்படும்போது சொல்லுங்க. நான் ட்ரைவர் அனுப்பறேன்”
“இட்ஸ் ஓகே! வி வில் டேக் கேர் “
“ஆர் யூ ஸ்யூர்?”
“யா! ஸ்யூர் “
“தென் ஓகே. உங்கள மீட் பண்ணினதுல ரொம்ப சந்தோசம். யூ கேரி ஆன் ” என்று கூறிவிட்டு நகர்ந்துவிட்டான்.
அதன்பின் வந்தனா வர்ஷனுடனான சந்திப்பை அதாவது சண்டையை அதிதியிடம் விளக்கினாள்.
“ஏன்டி? ஏன்? அவர் கிட்ட என்னடி உனக்கு பிரச்சனை? நீ சிரிச்சது,பார்க்காம இடிச்சது உன் தப்புதானே?”
“என்னமோ தெரிலடி. பார்த்தாலே வாய் நமநமக்குது. சிரிச்சது தப்புதான். யூ நோ வாட். எனக்கு சாஸ் கொட்டிருச்சு. அவருக்கும் கொட்டிருச்சுனு அல்ப சந்தோஷம்! ஏன்னே புரிலடி! அதுலதான் சிரிச்சேன். அதுக்குன்னு ஓவரா பேசினா சும்மா இருக்க முடியுமா?”
“உனக்கு முடியாதுடி ஆத்தா “ என்று அதிதி கூற இருவருமே சிரித்தனர்.
அன்றிரவு நால்வருமே தங்களின் இயல்பினை மீறி தாங்கள் நடந்து கொண்ட விதம் பற்றி வியந்துகொண்டிருந்தனர். ஆனால் அதற்காக வருத்தம் தோன்றவில்லை. மாறாக ஒரு இதமான உணர்வு தோன்றி அதையே சிந்திக்க வைத்து இம்சித்தது.புதுவித புத்துணர்வு பூத்திருந்தது
இந்த புத்துணர்வு எதில் கொண்டு நிறுத்துமோ? அது எந்தெந்த வகையில் இவர்களின் வாழ்வில் விளையாடப் போகிறதோ? இவர்களின் புத்துணர்வு எத்தனை நாட்கள் நிலைக்குமோ? பொறுத்திருந்து பார்ப்போம்.