You don't have javascript enabled
Narmada novelsRomance

Madhu’s Maran-14&15

அத்தியாயம் 14:


இங்கே கதையை கூறிக் கொண்டிருந்த வாணியிடம்,

“என்னது… பாரத்ததும் உங்கப்பா கிட்ட பொண்ணு கேட்டுட்டாரா??” என அதிர்ச்சியாய் ஆஷிக் கேட்க,

“நிஜமாவாடி” என மஹாவும் அம்முவும் கேட்க,

“சீரியஸ்ஸா அவங்க அப்பாட்ட அப்படி கேட்டீங்களா மாறன்” என ஆச்சரியமாய் கேட்டான் இளா.

“அய்யோ அங்கிள் ஒரு வழி பண்ணியிருப்பாரே உங்களை… என்னைய ஃப்ரண்ட்னு ஏத்துக்க வைக்கவே கேபி படாதபாடு பட்டாளே” என ஆஷிக் பேச,

“அதானே!! அங்கிள் எப்படி ரியாக்ட் பண்ணாங்க??” என மஹா கேட்க,

“மாறனுக்கு செமத்தியா அடி விழுந்துச்சோ… காதல்ல இதெல்லாம் சகஜமப்பானு தூசு தட்டி விட்டுட்டீங்களோ” என சிரிப்பாய் இளா வினவ,

“ஷ்ப்பா என்னைய பேச விடுங்க எல்லாரும். நீங்களே கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு போனா… நாங்க எப்படி பதில் சொல்றது” என கூறிய வாணி,

“எனக்கு இதெல்லாம் வெற்றி சொல்லி தான் தெரியும். நான் அப்ப தான் அரை மயக்கம் பாதி தூக்கம்னு இருந்தேனே” என்ற வாணி,

“அப்புறம் என்ன நடந்துச்சுனு என்னவர் சொல்லுவார்” என்று கேலி புன்னகையுடன் வாணி கூற,

“ஆஹா வாணி ரியாக்ஷன் பார்த்தா அப்ப கண்டிப்பா அடி விழுந்திருக்கும் போலயே” என ஆஷிக் கிண்டலடிக்க,

அனைவரும் சிரித்திருக்க,
மாறன் பேச்சை தொடங்க அவனை பார்த்திருந்தினர்.

வாணி தந்தையின் எதிர்வினையை கூறலானான் மாறன்.

அன்று…
“எனக்கு உங்க பொண்ணை கட்டிக் கொடுக்கறீங்களா??” என மாறன் கேட்ட அடுத்த நொடி,

ஒரு நிமிடம் அதிர்ந்து உறைந்து போனார் செல்வம்.

“யார் இந்த பையன்?? திடீர்னு ஏன் இப்படி கேட்கிறான்?? ஒரு வேளை நம்ம பொண்ணை லவ் பண்றானோ?? நம்ம பொண்ணும் இவனை லவ் பண்ணுதோ??” இவ்வாறு எண்ணும் போதே அவரின் மனம் வேகமாய் துடிக்க,

“சே சே என் பொண்ணு கண்டிப்பா என்னை மீறி எனக்கு பிடிக்காத விஷயம் எதுவும் செய்ய மாட்டா. நான் என் பொண்ணை பத்தி இப்படி யோசிக்கிறதே தப்பு” என பலவகையான எண்ணங்கள் அவரை சுழன்றடிக்க, மாறன் முகத்தையே எரிப்பது போல் கடுமையாய் பார்த்திருந்தார் செல்வம்.

அவரின் பார்வையின் காட்டத்தில், “தான் கேட்டது எவ்வளவு அபத்தமானது” என்று உணர்ந்தான் மாறன்.

அவரின் பார்வையில் அப்பெண்ணை அவர் தவறாய் ஏதும் எண்ணிவிட்டாரோ அதனால் அவளுக்கு ஏதும் தீங்கு நிகழ்ந்திடுமோ என பதறிய மாறன்,

“சாரி சார். உங்க பொண்ணு பேரு கூட எனக்கு தெரியாது. அவங்க என்னை லவ் பண்றாங்களோனுலாம் எதுவும் நினைச்சிடாதீங்க. அவங்களுக்கு நீங்கனா உயிர். அவங்க ஒரு அப்பா பொண்ணு”
என அவளை காப்பாற்றுவதாய் எண்ணி மாறன் மீண்டும் குழப்பத்தை விளைவிக்க,
“ஹலோ முதல்ல நிறுத்துங்க. நீங்க யார்னே எனக்கு தெரியாது. உங்க பேச்சை கேட்டு என் பொண்ணை தப்பா நினைக்கிறதுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்லை. முதல்ல என்ன தைரியத்துல என்கிட்ட இப்படி கேட்டீங்க. என் பொண்ணு பேரு தெரியாதுனு சொல்றீங்க. ஆனா அவளுக்கு என்னைய ரொம்ப பிடிக்கும் அப்பா பொண்ணுனு சொல்றீங்க… என்ன அவளை லவ் பண்றேனு அவ பின்னாடி சுத்திட்டு இருக்கீங்களா??” என தன் கோபத்தை இழுத்து பிடித்து கடுமையான குரலில் அதட்டி செல்வம் கேட்க,

சற்று வெலவெலத்து தான் போனான் மாறன்.

செல்வத்தின் உடல்வாகு சற்று ஆஜானுபாகுவாய் பார்க்கும் எவரையும் மிரட்சியடைய செய்யும். அவ்வாறு இருப்பவரிடம் நட்பாய் பழகும் வாணியின் தோழமைகளே பேச தயங்குவர். இதில் மாறன் பயம் கொள்ளாது இவ்வாறு கேட்டதே அவருக்கு ஆச்சரியமளிக்க, ஏனோ அவரின் உள்ளுணர்வு மாறனை நல்லவனாய் அவருக்கு உணர வைக்க, தன் கோபத்தை கட்டுபடுத்தி உரையாற்றிக் கொண்டிருந்தார் செல்வம்.

“கொஞ்சம் வெளில வாங்க அங்கிள். நான் தெளிவா உங்ககிட்ட சொல்றேன். இங்க பேசினா அவங்களுக்கு டிஸ்டபென்சா இருக்கும்” என்று மாறன் கூற,

மாறனின் சார் என்ற விளிப்பு அங்கிள் ஆனதையும் வாணியின் நலன் கருதி சற்று தள்ளி நின்று பேசலாம் என்ற அவனின் அக்கரையையும் குறித்துக் கொண்டவர் அவனுடன் அறைக்கு வெளியே செல்லலானார்.

வெளியில் சென்று மேஜையில் அவர் அமர்ந்ததும், “ஆமா உங்க பொண்ணு பேர் என்ன அங்கிள்” என மாறன் கேட்க,

அவனை முடிந்த மட்டும் நன்றாய் முறைத்தவர், “மதுரவாணி” என்றார்.

“இப்ப இங்க என் அப்பா ட்ரீட்மென்ட்காக வந்தேன் அங்கிள். அப்ப தான் பக்கத்து பெட்ல மதுவ பார்த்தேன்” என்று மாறன் கூற,

“என்னது பார்த்ததும் காதலா??” என்று ஜெர்க் ஆன செல்வம், அவனின் மது என்ற விளிப்பில் எரிச்சலானார்.

ஏனென்றால் மது என்று வாணியை அழைப்பது அவர் மட்டுமே. அவரறியாதது அலுவலகத்தில் சிலர் அவளை அவ்வாறு அழைப்பது. ஆக அவரை பொறுத்த வரை அந்த அழைப்பு அவருக்கு மட்டுமே உரியது. மற்றவர்களுக்கு அவள் வாணி மட்டுமே.

“அவளை நீங்க வாணினு சொல்லலாம்” என கோபமாய் அவர் உரைக்க,

“இல்ல அங்கிள் மது தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அப்படியே கூப்பிட்டுக்கிறேனே” என கண்களை சுருக்கி கெஞ்சுவது போல் அவன் கேட்க,

“ஆமா இங்க ஒருத்தன் உன் பொண்ணை பொண்ணு கேட்டுட்டு நிக்கிறான். நீ பெயர் உரிமை போராட்டம் பண்ணிட்டிருக்க… சட்டு புட்டுனு பேசி முடிப்பியா” என செல்வத்தின் மைண்ட் வாய்ஸ் அவரை ஏகமாய் கடிந்துரைக்க,

“சரி நீங்க முதல்ல விஷயத்தை சொல்லுங்க” என்றார் செல்வம்.

“இதுக்கு முன்னாடி இரண்டு மூனு நேரம் மதுவ பார்த்திருக்கேன். ஆனா தூரமா அவங்க பேசுறதை தான் கேட்டிருக்கேன். ஆனா அதுவும் சில நிமிஷங்கள் தான். அதனால அவங்களுக்கு என்னைய தெரியாது.
இப்ப மதுவ பார்த்துட்டு இருந்த இந்த நொடி தான் அவங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவு செஞ்சேன்” என்று மதுவின் மீதான தன் எண்ணங்களை தனது முந்தைய சந்திப்பின் நிகழ்வுகளை என மாறன் செல்வத்திடம் உரைத்திருந்தான்.
இன்று…

“அன்னிக்கு அப்பா கிட்ட சொல்லிட்டு மதுவ பார்க்க போனேன்ல. அவ முகத்தை பார்த்தேன். அவளை விட்டு போக மனசேயில்லை. அவ கூடவே இருந்துடனும் போல தோணுச்சு. ஒரு வார்த்தை நேருக்கு நேர் பேசினதில்ல. இது என்ன இப்படி ஒரு உணர்வுனு விளங்க முடியாம தான் பார்த்துட்டு இருந்தேன். என் வாழ்க்கை முழுசுக்கும் அவ கூடவே வேணும்னு மனசு சொல்லிச்சு. ஆனா எப்ப அவ அப்பாவின் செயல்லயே எனக்கு பொஸஸிவ்னஸ் வந்துச்சோ…. இவளை விட்றாதடா மாறானு மனசு கூவிச்சு. இப்ப அப்படியே விட்டு போய்டேனா அவ்ளோ தான், அவ என்னைய விட்டு போய்டுவாளோனு மனசு வலிக்க ஆரம்பிச்சிடுச்சு. அவளுக்காக என் மனசு ஏங்கி தவிக்குதுனு புரிஞ்சிக்கிட்டேன். இப்படி நிமிஷத்துல என் மனசுல நடந்த உணர்வுகளின் போராட்டம் தான் மாமாகிட்ட என்னைய அப்படி கேட்க வச்சிது” என்று மாறன் தன்னிலையை விளக்கி கொண்டிருந்தான்.

“எப்படி இப்படி நம்பவே முடியலை மாறன். ஆனா உங்க ஃபீலிங்க்ஸ் எங்களுக்கு புரியுது” என ஆஷிக் உரைக்க,

“சரி அங்கிள் என்ன சொன்னாங்க அண்ணா” என்று கேட்டாள் அம்மு.

அன்று…

வெற்றியின் பேச்சை பொறுமையாய் கேட்டிருந்த செல்வத்திற்கு இது மாறன் மதுவை பார்த்ததும் வந்த காதலல்ல என்றும், வெகு நாட்களாய் அவன் மனதின் தேடல் கிடைத்துவிட்ட ஆசுவாசத்தில் உணர்ந்திட்ட நேசமாய் இருக்கலாம் என எண்ணிய செல்வம்,

“சரி தம்பி. நீங்க சொல்றதெல்லாம் சரி. என் கண்டஷனுக்கு நீங்க ஒத்து வந்தா உங்களுக்கு என் பொண்ணை கட்டி தரேன்” என்றார் செல்வம்.

மாறனுக்கு இது பெரும் அதிர்வாய் இல்லை. இப்படி திடீரென்று பெண் கேட்டவனை உதைக்காமல் அவர் இவ்வாறு தன்மையாய் பேசுவதே ஆசுவாசத்தை தந்தது.

“நீங்க எந்தளவுக்கு என் பொண்ணை கட்டிக்கிறதுல உண்மையா இருக்கீங்கனு எனக்கு தெரியலை. ஏற்கனவே ஒரு ஏமாற்றத்தை சந்திச்சிருக்கீங்க வாழ்க்கைல. அது உங்களை பக்குவபடுத்தியிருக்கும்னு நினைக்கிறேன். இப்ப நடந்த எதுவும் என் பெண்ணுக்கு தெரிய கூடாது. இரண்டு வருஷம் இப்படியே உங்க வாழ்க்கைய பார்த்துட்டு இருங்க. என் பொண்ணும் அவ வாழ்க்கைய வாழட்டும். இந்த இரண்டு வருஷம் கழிச்சு இன்னும் என் பொண்ணை தான் கட்டிக்கனுங்கிற எண்ணம் உங்க மனசுல இருந்துச்சுனா அப்ப வந்து என்கிட்ட பேசுங்க. அப்ப முடிவு பண்ணிக்கலாம். அது வரை என் பொண்ணை தொந்தரவு செய்ய மாட்டீங்கனு நம்புறேன்” என்று அவர் பேசிக் கொண்டிருந்த நேரம் மாறனை தேடி அவனின் தந்தையே வந்துவிட்டார்.

“எவ்வளவு நேரம்டா உனக்காக அங்கேயே உட்கார்ந்துட்டு இருக்கிறது.” என்று அவனின் தந்தை கேட்க,

“அப்பா இவங்க தான் நம்ம பக்கத்து பெட்ல இருந்த பொண்ணோட அப்பா. இவர்கிட்ட பேசிட்டு இருந்தேன். நீங்க போய் கார்ல உட்காருங்க, நான் இதோ வந்துடுறேன்” என்று தனது கார் சாவியை தந்தையிடம் வழங்கி அவரை அவ்விடம் விட்டு அகலசெய்ய அவன் முனைய,

அவரோ மதுவின் தந்தையிடம் நலம் விசாரித்து கொண்டிருந்தார்.
இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்த பின் தன் தந்தையை அனுப்பிய மாறன்,
“நீங்க சொல்றது புரியுது அங்கிள். கண்டிப்பா நான் காத்திருந்து வருவேன் என் மதுக்காக. ஆனா கண்டிப்பா முறையா பொண்ணு பார்க்கிற அன்னிக்கு தான் மதுகிட்ட பேசுவேன். அதுக்கு முன்னாடி அதுக்கான எந்த முயற்சியும் நான் எடுக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டான் மாறன்.

செல்வத்தை பொறுத்தவரை அவன் திரும்ப வர மாட்டான் என்றே எண்ணினார். ஆயினும் தன் மகளுக்கு போதைய பாதுகாப்பு தேவை என்றெண்ணியவர் அவளை சென்னைக்கு அழைத்து சென்றுவிட்டார்.

அவளின் உடல்நிலையை கூறி கேட்டவுடன் அலுவலகத்திலும் அவளின் இட மாறுதலுக்கு ஒத்துக் கொண்டனர்.

இங்கே…

ஆஆஆஆ வென ஆச்சரியமாய் மாறன் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்த தோழமைகள் அனைவரும் அடுத்து அடுத்து மாறன் மேல் கேள்விகளாய் தொடுக்க ஆரம்பித்தனர்.

“அங்கிள் அப்படி விட்டுட்டு போற ஆளு இல்ல மாறன். எனக்கு தெரிஞ்சு கண்டிப்பா அடுத்து உங்களை பத்தி முழுசா பேக்ரவுண்ட் வெரிபிகேஷன் பண்ணியிருக்கனும்” என்று ஆஷிக் கூற,

“வாவ் ஆஷிக்கு… செம்மயா புரிஞ்சி வச்சிருக்கடா அப்பாவ” என குதூகலித்தாள் வாணி.

“ஆமா எங்க மேரேஜ் முடிஞ்ச பிறகு தான் இவர் இந்த கதைய என்கிட்ட சொன்னாரு. அப்ப நான் அப்பாகிட்ட கேட்டேன். அப்பா சென்னை வந்ததும் இவரை பத்தின முழு டீடைல்ஸூம் டிடெக்டிவ் வச்சி வாங்கிட்டாங்களாம்.

“இந்த காலத்துல இப்படி ஒருத்தன் வந்து சொல்லும் போது எப்படிமா நம்புறது. இதனால உனக்கு என்ன பிரச்சனைலாம் வருமோனு தான் பயமா இருந்துச்சு. அங்கே மாப்பிள்ளை தம்பி அப்படி சொல்லும் போது அமைதியா இருந்த காரணம், நம்ம இருந்தது வேற ஊருல. அங்க இருந்து எகிறி குதிச்சு பேசி சண்டை போடுறது நமக்கு சேஃப் இல்ல. அவருக்கு அங்க பெரிய ஆளுங்கலாம் கூட்டு இருக்கலாம். அதனால எதுனாலும் நம்ம ஊருல வச்சி பார்த்துக்கலாம்னு தான் உன்னை இங்க என் பார்வைக்கு கூட்டிட்டு வந்தேன். அதுக்கு அப்புறம் தான் அவரை பத்தி விசாரிச்சேன். உன்னைய வச்சி எதுவும் தப்பா ப்ளான் செஞ்சியிருந்தா ஒரு வழி ஆக்கிடனும்னு நினைச்சி தான் விசாரிக்க என் சிஐடி ஆபிஸரா இருக்க ஃப்ரண்ட் கிட்ட சொன்னேன். அவர் தான் டிடெக்டிவ் வச்சி டீடெய்ல்ஸ் கலெக்ட் செஞ்சி கொடுத்தாருனு” அப்பா சொன்னாங்க என்றாள் வாணி.

“அண்ணா இரண்டு வருஷம் அதுக்கப்புறம் வாணிக்காக காத்திருத்தீங்களா?? அதுவரை அவளை பார்க்காம இருந்தீங்களா?? அவளுக்கு மேரேஜ் முடிவாகுற வரைக்கும் உங்களை பத்தி எதுவும் தெரியாம இருந்திருக்கே” என வியப்பாய் வேணி கேட்க,

மென்மையாய் சிரித்த மாறன், “அன்னிக்கு பிறகு மதுவ பத்தின விபரங்கள் சேகரிக்க ஆரம்பிச்சேன். மதுவோட எஃப் பி ஐடி மட்டும் வாங்கிட்டா எல்லா தெரிஞ்சிடும்னு நினைச்சா, அது கண்டுபிடிக்க வழியே இல்லாம இருக்க, வேற வழியில்லாம் மாமாவோட எஃப் பி அக்கவுண்ட்கே ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து அவ எஃப் பி குள்ள போகலாம்னு பார்த்தா, மேடம் அவங்க அப்பா வோட மியூசுவல் ப்ரண்ட்டா இருந்தா கண்டிப்பா அந்த ரெக்வெஸ்ட் அக்செப்ட் பண்றதில்லனு ஒரு பாலிசி வச்சிருந்தாங்க போல. ஏன்னா அவங்க அப்பா யாரு ரெக்வெஸ்ட் கொடுத்தாலும் ஊருகாரங்கனா அக்செப்ட் பண்ணிடுவாங்களாம். கடுப்பாகி இவ தான் நமக்குனா இவளை பத்தி தானாவே தெரிய வரும்னு விட்டுட்டேன். அப்ப தான் இவ கூட படிச்ச பையன் ஒரு கம்பெனி மீட்டிங்ல தானாவே எனக்கு ப்ரண்ட்டாகி ஏதோ பேசும் போது அவனாவே இவ பேரை சொல்ல, அன்னிக்கு எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அளவேயில்ல. இவ தான் என் மனைவினு நான் தீர்க்கமா முடிவு செஞ்சா நாள் அது. இப்படி நம்ம எதிர்பார்க்காத சமயம் தானாவே எல்லாம் நடந்து நம்ம தேடினது நம்ம கை தேடி வருதுனா நம்ம தேடல் சரியானதுனு தானே அர்த்தம்.”

“தூரமா இருந்து எஃப் பி மூலமா அவளோட ஆக்டிவிடிஸ் மட்டும் பார்த்துகிட்டு இருந்தேன். உண்மைய சொல்லனும்னா நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமா அவ மேல எனக்கு காதல் மலர்ந்து வளர்ந்துட்டு இருந்த காலங்கள் அது” என மாறன் அன்றைய நாளுக்கே சென்று தன் நினைவுகளை பூரிப்பாய் ரசித்துணர்ந்து உரைத்திருக்க,

எதிரில் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் வாணி.

“என்கிட்ட கூட இவர் இவ்ளோ ஃபீல் பண்ணி சொல்லலைப்பா” என அவளின் தோழமைகளிடம் கூறி அவனை பார்த்திருக்க,

“இதுக்கு தான் இப்படி ஒரு நட்பு கூட்டம் வேணுங்கிறது” என்றான் ஆஷிக்.

அந்த சமயம் ஹோட்டலின் ஆட்கள் வந்து நேரமாகிவிட்டது இடத்தை காலி பண்ணுங்க என்று நிற்க,

அனைவரின் மனதிலும் சுகமான நினைவுகளுடன் பிரிவின் பாரமும் ஏறிக் கொண்டது.

“அங்கே ரஹாவும் என் பையனும் எனக்காக காத்துட்டு இருப்பாங்க. எப்பவும் ஈவ்னிங் போனதும் அவங்களோட பார்க்ல ஒரு வாக் போவேன்.” என ஆஷிக் கூற,

“மதி சாப்பிட்டாரோ இல்லையோ… கொஞ்ச நாளா வேலை அதிகம்னு வீட்டுக்கு வந்தப்புறமும் லாகின் பண்ணிட்டு இருக்காரு. போய் அவருக்கு ஏதாவது வேணுமானு பார்த்து செஞ்சி கொடுக்கனும்” என்று கூறிய மஹா, “வாங்க யாழி செல்லம் அம்மாகிட்ட வாங்க” என மாறனிடம் இருந்த தன் மகளை வாங்கினாள்.

“எப்படி இருந்தோம்ல பெங்களூர்ல. இப்ப அவங்கவங்க வாழ்க்கை கணவன் குடும்பம் குழந்தைகள்னு அதுலயே ஒன்றி வாழ்க்கை போற பாதைல போய்ட்டு இருக்கோம்ல” என வாணி மனதில் தோன்றியதை உணர்ந்து கூற,

அனைவரும் அமைதியாய் தலை அசைத்து புன்னகைத்து அவரவர் இடத்திலிருந்து எழுந்தனர்.

இளாவிடமிருந்த தங்களது மகனை வேணி கையில் வாங்க முற்பட, “நீ ரிலாக்ஸ்ட்டா வா அம்ஸ். அவன் அழுதானா நானே உன் கிட்ட கொடுக்குறேன்” என கூற,

இதை பார்த்திருந்த வாணி, “அதே லவ்ஸ் இன்னும் கண்டின்யூ ஆகுது போல இளா அண்ணா. உங்க லவ்ஸ் முழுசா கூட இருந்து பார்த்த ஒரே ஆளு நானு பெருமையா சொல்லிப்பேன்” என இல்லாத காலரை தூக்கிவிட்டபடி வாணி கூற,

“அடியேய் மானத்தை வாங்காதடி” என வாணியின் கையை கிள்ளியிருந்தாள் வேணி.

“ஸ்ஸ்ஸ்ஆஆ… ஏன்டி கிள்ளுற!! உண்மைய தான சொன்னேன்” என்ற வாணி,

“எப்ப குட்டி மதி அரைவ் ஆவாங்க மஹா” என வாணி மஹாவை சீண்ட,

“அண்ணாஆஆஆ நல்லா வளர்த்து வச்சிருக்கீங்கண்ணா அவளை” என மாறனிடம் மஹாவும் வேணியும் ஒரு சேர கூறினார்.

பேசி கொண்டே அனைவரும் ஹோட்டலின் வெளியே வந்திருந்தனர்.

“சரி வாங்க எல்லாரும் சேர்ந்து போட்டோ எடுப்போமென” அழைத்த மாறன் ஒரு க்ரூப்பி எடுத்து இந்நிகழ்வினை பசுமையான நினைவாய் புகைப்படுத்தில் பதித்துக் கொண்டான்.

ஆஷிக் மஹாவை டிராப் செய்துவிட்டு செல்வதாய் உரைத்துக் கொண்டிருந்த நேரம், அவர்களின் முன் ஒரு கார் வந்து நின்றது.

“அச்சச்சோ என்னைய தேடியே வந்துட்டாரு போலயே” என மஹா கூற,

காரிலிருந்து இறங்கினான் மதி, மஹாவின் கணவன்.

“ஹை ஆல். ஹௌ ஆர் யூ? ” என அனைவரையும் பார்த்து கை அசைத்தவன் அருகில் வந்ததும் அனைவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.

“மேடம் ப்ரண்ட்ஸ்ஸ பார்த்ததும் என்னைய மறந்துட்டீங்களா? போன் பண்ணா கூட எடுக்கலை. நான் என்னாச்சோ ஏதாச்சோனு செஞ்ச வேலைய விட்டு பதறி போய் வந்திருக்கேன்” எனக் கூறி மதி மஹாவை முறைக்க,

“நீ மாறவே இல்லடி” என கூறி வாணி சிரித்தாள்.

மதுவை முறைத்த மாறன், “அவங்க எவ்ளோ பயந்து வந்திருக்காங்க நீ காமெடி பண்ணிட்டிருக்க” என கூற,

அமைதியாகி போனாள் வாணி.

பின் மதியும் மஹாவும் பேசிக் கொண்டே விடைபெற்று செல்ல,

அனைவரும் மீண்டும் சந்திப்போமென கூறி அவரவர் இல்லத்திற்கு சென்றனர்.

காரில் ஏறிய வாணி மாறனிடம் பேசாது மௌனமாகவே வர, அவன் அவள் கைபற்ற முற்பட அவள் உதறி தள்ள, “திரும்பவும் ஆரம்பிச்சிட்டாடா… இப்ப சொன்னதுக்கு தான் கோப பட்டுறுப்பாங்க மேடம். வீட்டுக்கு போனதும் சரி பண்ணிடலாம்” என எண்ணிக் கொண்டே காரை இயக்கினான்.

ஆனால் வீட்டில் இதை விட பெரும் பூகம்பம் வெடிக்கப் போவதை அறியவில்லை மாறன்.

— நர்மதா சுப்ரமணியம்

அத்தியாயம் 15:
முழு கார் பணத்திலும் பேசாது மெளனமாய் வந்தவள், வீட்டை அடைந்ததும் கதவை திறந்த தன் அத்தையிடம் சாப்பிட்டார்களா என கேட்டுவிட்டு விறுவிறுவென தங்களது அறைக்குள் சென்றுவிட்டாள் வாணி.

காரை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு வந்த மாறன், “எங்க அம்மா அவ?” என்று கேட்க,

“ஏன்டா உன் முன்னாடி இவ்ளோ பெரிய உருவமா நான் நிற்கிறது கண்ணுக்கு தெரியலை. இவ்ளோ நேரம் அவ கூட தான சுத்திட்டு வந்த… வந்தும் அவள தான் தேடுற!! அவ கூட பரவாயில்லடா “சாப்பிட்டாங்களா அத்தை?? மாமா சாப்பிட்டாங்களானு” கேட்டுட்டு போனா… நீ என்னடானா என்னை பொருட்டாவே மதிக்காம இருக்கிற” என வருத்தமாய் உரைக்க,

“அய்யோ அவ கோவமா போனத நினைச்சே வந்ததுல என்னலாம் பிரச்சனை ஆகுது. மதுஊஊஊ உன்னை வந்து கவனிச்சிக்கிறேன்” என மனதிற்குள் அவளை வறுத்தெடுத்தவன்,

“அப்படிலாம் இல்லம்மா!! என் செல்ல அம்மாக்காக தானே நான் இருக்கேன். அவ உங்களை மதிக்காம நடந்தா நானே கேட்டு சண்டை போடுவேனே!! அவ அப்படி இல்லாம என்னைய விட உங்க அம்மா தான் உங்களுக்கு முக்கியமா இருக்கனும்னு சொல்றவ. அதான் என்னை அவகிட்ட பித்தா அலைய வைக்குது போல” என ஏதேதோ பிதற்றிக் கொண்டிருக்க,

அவனை முறைத்துப் பார்த்திருந்த அவனின் அம்மா,

“நான் இப்ப என் மருமகளை ஒன்னும் சொல்லலையே!! நீ ஏன் அவ மேல பித்து பிடிச்சி போய் இருக்கனு கேட்கலையே… என் மேல இருந்த அன்புலாம் குறைஞ்சு போன மாதிரி தெரியுதேனு தான் கேட்கிறேன்” என அவர் வேதனையாய் கூற,

“என் செல்ல அம்மாவ விட எனக்கு யாரு பெருசா இருக்க போறாங்க” என மாறன் அவனின் தாய் கன்னத்தை பற்றி கொஞ்ச,

“ம்ப்ச் போதும் ஐஸ் வச்சது” என அவனின் கையை தட்டிவிட்டாரவர்.

எப்படி அம்மாவை சமாதானம் செய்வதென யோசித்தவன், “அம்மா… அப்பா எங்கே??” என்றான்.

“பரவால்ல அம்மாவ தான் மறந்துட்ட… அப்பாவ ஞாபகம் வெச்சிருக்கியே!! அது வரைக்கும் சந்தோஷம்” என அவர் அதற்கும் குதற்கமாய் பதிலுரைக்க,

“அம்மாஆஆஆ” என அலறினான் மாறன்.

“உள்ள தான் தூங்குறாரு உங்கப்பா. அவர் உனக்கு கல்யாணம் முடிக்கும் போதே சொன்னாரு. பசங்களுக்கு மேரேஜ்னு செஞ்சிட்டா அவங்களுக்குனு ப்ரைவசி கொடுக்கனும். எல்லாத்துலையும் நம்மள கூப்பிடல கேக்கலனுலாம் யோசிக்க கூடாதுனு சொன்னாங்க. என் மூளைக்கு புரிஞ்சாலும் பாழும் மனசு கேட்காம வாடி வதங்குதே!! நான் என்ன செய்ய??” என அவர் மாறனையே கேட்க,

“அம்மா!! இங்க வாங்க இப்படி உட்காருங்க… என்ன செய்யனும்னு நான் சொல்றேன்” என்றவன் அவரை நாற்காலியில் அமர வைத்து அவரின் காலினருகில் மண்டியிட்டவன்,

“என் அம்மாக்கு அவங்க பையன் மேல தான் வச்சிருக்க பாசம் தான் பெரிசுனு இத்தனை நாள் இருந்திருக்கும். இப்ப இன்னொருத்தி வந்து அவளோட பாசத்தை காமிக்கவும், நம்ம மகனுக்கு அவ பெரிசா தெரிஞ்சு நம்ம அன்பை மறந்திடுவானோங்கிற கவலை வந்துட்டு. நீங்க நினைக்கிறது தப்புனு உங்க மூளை சொன்னாலும், மனசு பொறாமை பட ஆரம்பிக்க உங்களுக்கு அதுவும் குற்றவுணர்வை தரனு அல்லாடிட்டு இருக்கீங்க. இதுக்கெல்லாம் ஒரு தீர்வு இருக்கு” என தீவிரமாய் மாறன் பேசி கொண்டிருக்க,

“எப்படி இதை சரி செய்றது… என்ன தீர்வு வெற்றி?” என ஆர்வமாய் அவர் கேட்க,

“ஹ்ம்ம் உங்களுக்கு ஒரு பேரனோ இல்ல பேத்தியோ வந்துட்டா இதெல்லாம் சரி ஆயிடும்” என்றவன் கூறிய நொடி,

“அடேய் படுவா” என அவன் முதுகில் ஒரு அடி போட்டு வாய் விட்டு சிரித்தார்.

அவனும் அவருடன் இணைந்து சிரித்திருக்க,
“ஆனா நீ சொல்றது சரி தான்டா வெற்றி. பேரனோ பேத்தியோ வந்துட்டா உன்னைலாம் யாரு கண்டுக்க போறா… நீ உன் பெண்டாட்டி பின்னாடியே சுத்து நான் என் பேரன் பின்னாடி சுத்துறேனு உன்னைய நான் மறந்து போய்டுவேன்” என அவர் முகத்தை ஒழுங்கு காட்டி கூற,

“என்ன எனக்கு பொறாமை வர வைக்க ட்ரை பண்றீங்களா?? செய்ங்க செய்ங்க… எங்கம்மாவ சுத்தி எத்தனை பேர் இருந்தாலும் பேரனே வந்தாலும் நான் தான் அவங்களுக்கு உயிர்னு எனக்கு தெரியும். அதனால நீங்க சொல்றதலாம் கேட்டு நான் பொறாமை பட மாட்டேனாக்கும்” என அவன் பதிலுக்கு ஒழுங்கு காட்ட,

அவன் கன்னத்தை பற்றி நெற்றியில் முத்தமிட்டார் அவனின் அன்னை.

“எவ்ளோ நாள் ஆச்சுடா உன்கிட்ட இப்படிலாம் பேசி… நீ டீனேஜ்ல இப்படி தான் பேசிட்டு இருப்ப… எப்ப பிசினஸ்னு ஊர் ஊரா சுத்த ஆரம்பிச்சியோ அப்ப என் குட்டி வெற்றிய ரொம்பவே நான் மிஸ் பண்ணேன்” என கூறியவர்,

“அப்புறம் உன் வாழ்க்கைல என்ன நடந்துச்சுனு எங்களுக்கு தெரியாது வெற்றி. கல்யாணம் வேண்டாம்னு கிட்டதட்ட முப்பது வயசு வரை இருந்துட்டு திடீர்னு இவளை தான் கட்டுவேனு வாணிய பொண்ணு கேட்க சொல்லி வந்து நின்ன… இப்ப நீ பழைய வெற்றியா… துள்ளலும் சந்தோஷமும் நிறைஞ்ச டீனேஜ் பையனா தெரியுறடா… எல்லாத்துக்கும் காரணம் மதுவா தான் இருக்க முடியும்” என்றவர் கூற,

மென்னகை புரிந்தானவன்.

“சரி ரொம்ப நேரம் ஆகிட்டு. போய் தூங்குங்க” என அவரை அறைக்குள் அனுப்பி வைத்துவிட்டு,

தனதறைக்குள் நுழைந்த நொடி வாணி எங்கே என தேடினான்.

கட்டிலில் அவள் இல்லாததை கண்டவன், திரும்பி பார்க்க குளியலறையிலிருந்து வெளி வந்த வாணி அவர்கள் அறையில் இருக்கும் மேஜையில் ஏறி நின்றாள்.

“இது நம்ம ரொமேன்ஸ் பண்ற ஸ்பாட் ஆச்சே. என் உயரத்துக்கு வரனும்னா ஏறி நிக்கிற இடமாச்சே. இப்ப எதுக்கு ஏறி நிக்கிறா?? அவ கோபத்துல வந்ததுக்கும் இப்ப இப்படி நிக்கிறதுக்கும் யோசிச்சு பார்ததா” என தன் மண்டையை தட்டி யோசித்தவன்,

“அய்யோ ஒரு வேளை அடிக்க போறாளோ” என தன் கன்னங்களை கை வைத்து மறைத்து அவளை பார்க்க,

அவனையே அதுவரை பார்த்திருந்தவள், அவன் அவளை பார்த்ததும் கை காட்டி அருகே அவனை அழைத்தாள்.

“எதுக்காக இவ நம்மளை கூப்பிடுறானு தெரியலையே… எதுவா இருந்தாலும் நம்ம இதை ரொமேன்ஸ் சீனா மாத்திடுவோம்” என மனதில் எண்ணிக் கொண்டு அவளருகே அவன் செல்ல,

அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக கோர்த்து அருகே இழுத்தவள் ஆழ்ந்த முத்தங்களை அவன் முகத்தில் பதித்தாள்.

“லவ் யூ கண்ணப்பா” என அவன் நெற்றியை முட்டி தன் நெஞ்சில் அவனை சாய்த்து அணைத்து கொண்டவள் இருக்க,

“லவ் யூடா செல்லகுட்டி” என அவனும் அணைத்துக் கொண்டான்.

இருவரும் மோன நிலையில் சில நிமிடங்கள் மௌனமாய் கடந்திருக்க,
“நீங்க இவ்ளோ நேரம் அம்மாகிட்ட பேசினதை கேட்டேன்ப்பா. உங்க மேல லைட்டா கோபமா தான் வந்தேன். ஆனா அத்தைகிட்ட நீங்க பேசினதை பார்த்ததும் கோபத்தை விட லவ் ஓவர் ஃப்ளோ ஆகிட்டு” அவன் தலையில் தன் கன்னம் வைத்து பேசி கொண்டிருந்தாள் வாணி.
அவள் நெஞ்சில் தலை சாய்த்திருந்தவன் வாய் விட்டு சிரித்தான்.

“பார்க்க அவளோ சந்தோஷமா இருந்துச்சு. ஏன் இத்தனை நாளா நீங்க இப்படி நடந்துக்கல அத்தை கிட்ட. வேலைக்கு போன பிறகு ஆளே மாறிட்டீங்கனு அத்தை சொன்னாங்களே… உங்களை பத்தி நான் தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கோ??” என்றவள் கேட்க,

அவளை தன் கைகளில் ஏந்தி கட்டிலில் அமர வைத்தவன், அவள் மடியினில் தலை சாய்த்து கொண்டான்.

“பாஸ்ட் தெரிஞ்சு என்ன செய்ய போற மதும்மா. இப்ப நான் எப்படி நடந்துக்கிறேங்கிறது தானே முக்கியம்” என அவள் விரலில் சொடுக்கெடுத்துக் கொண்டே அவன் கூற,

அவன் கையிலிருந்து தன் விரலை உறுவியவள், “இல்லங்க நான் தெரிஞ்சிக்கனும். என்னை ஹாஸ்பிட்டல்ல பார்க்கிறதுக்கு முன்னாடி எங்க பார்த்தீங்க. அப்படி என்னை முதல் நேரம் பார்க்கும் போது மருதன் என்னைய பத்தி யோசிச்சது போல நீங்களும் என்னமோ நினைச்சிருக்கீங்க” என வாணி நேரடியாய் கேட்க,

மாறன் அதிர்ந்து அவள் மடியை விட்டு எழுந்து அமர்ந்தான்.

“உனக்கெப்படி தெரியும்??” என்றவன் அதிர்ச்சியாய் கேட்க,

“பெங்களூர்ல அன்னிக்கு நான் தூங்கிட்டேன்னு நினைச்சு என்கிட்ட பேசிட்டு இருந்தீங்க… அப்ப கேட்டேன்” என்றவள் சொன்ன நொடி,

“எப்படி இவளை எதிர் கொள்வது” என்ற பெரும் பதட்டத்தில் மாறனின் இதயம் தாறுமாறாய் துடிக்க,

“ஆனா நீங்க அப்ப அப்படி நினைச்சதுக்காக இப்ப எவ்ளோ குற்றவுணர்வுல துடிக்கிறீங்க நான் இதை எவ்ளோ கவலைபடுவேனு ஃபீல் பண்றீங்கனும் புரிஞ்சிதுங்க.”

“நான் கஷ்டபடுவேனு நினைச்சு என்கிட்டே நீங்க சொல்லாம இருக்க உங்க பாஸ்ட்லாம் எனக்கு இப்ப தெரிஞ்சிக்கனும். ஏன் இதை கேட்கிறேனா உங்களுக்கு இது பெரும் பாரமாய் மனசுல இருந்துட்டே இருக்கும். அதைவிட நீங்க சொல்லி நான் கஷ்டபட்டாலும் உங்களுக்காகவாவது நான் திரும்ப நார்மல் ஆயிடுவேன். இல்லனாலும் உங்க காதலால என்னை சரி ஆக்கிட மாட்டீங்களா?” என அவன் கண் பார்த்து அவள் கேட்க,

தன் மீதான அவளின் அக்கறையிலும் தன் காதல் மீதான அவளின் அளவில்லா நம்பிக்கையிலும் பூரித்து போனவன், தன் கடந்த கால கதையை உரைக்கலானான்.

அவனின் கடந்த காலக் கதை வாணியிடம் எவ்விதமான எதிர்வினையாற்றும்?? பொறுத்திருந்து பாரப்போம்…

— நர்மதா சுப்ரமணியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content